திங்கள், 28 செப்டம்பர், 2015

புராதன சின்னம்



காலமெல்லாம்
கடுந்தவம் புரிவது போல்
கால் கடுக்க நிற்கும் நீ
காவலனா இல்லை காணலனா?

ஊருக்கு வெளியில் தான்
உன் வாசம்—இருந்தும்
உன்னிடம் வரும் மாந்தருக்கு
உதவாமல் இருப்பதில்லை

கரம் நீட்டி உதவும்
கருணையுள்ள மாந்தர் போல்
கல்லுக்குள்ளும் ஈரமுண்டு
தலை கொடுத்துத் தாங்குவதால்

பலனேதும் பாராமல்
பலரது பாரம் சுமந்துதவும்
புராதன சின்னம் போல

பழமையான சுமைதாங்கி

நற்சிந்தனை



சிரித்து மகிழ்ந்திரு
பரிவும், பாசமும் பக்கம் வரும்
சினமும், பகையும் தூர விலகும்

கல்வி கற்று அறிவை பெறு
உன்னில் நம்பிக்கை வை
வாழ்க்கை சிகரம் தொடும்

எல்லோரும் வாழ
இறைவனை வேண்டு
உன் உயிரும் காக்கப்படும்

ஆத்ம சுத்திக்கு
ஆண்டவனை வழிபடு
அழிந்துபோகும் சினம்

வெறுக்காதே பிறரை
விவேகமல்ல—அது
வழி வகுக்கும் உன் அழிவுக்கு

கவலையை நீக்கு
கடமையை செய்
காலனும் அஞ்சுவான்

முக நூலையும், தொலைபேசியையும்
விட்டு விலகு
விவாகரத்து கூட வெளியேறும்




வெள்ளி, 25 செப்டம்பர், 2015

வாழ்வியல் உண்மை




பிறக்கும் குழந்தை
புவிக்கு வந்ததை அழுது சொல்லும்
அந்த அழுகையின் குரலில்
அன்னை வலியை மறந்து
அகம் குளிர்வது போல்

கால் கடுக்க நடந்து
குடத்தில் எடுத்து வரும் நீர்
குடும்ப தாகத்தைத் தீர்க்கும்போது
காலின் வேதனை மறைந்து
மனம் மகிழ்வு கொள்ளும்

விடிந்தால் ஒரு மறியல்
வழி நெடுக வாகனங்கள்
வாழ்வாதாரம் பறிபோகும்,
வழக்கம்போல் வரும்
அதிகாரியின் வாக்குறுதியால்
அனைத்தும் மகிழ்ந்து கலையும்

அநுபவிக்காத வரை
அனைத்தும் புதிது தான்
அநுபவித்தால் அறியமுடியும்
மனம் வலுவடையும் வலியைத் தாங்க,
மார்க்கமும் புலப்படும்

தவறான பல முடிவுகளுக்கு பின்
தோன்றுவது அநுபவம்,
அந்த அநுபவத்திலிருந்து
கிடைக்கப் பெறுவது
சிறந்த முடிவெடுக்கும் திறன்
இது வாழ்வியல் உண்மை.


முரண்பாடு.




முரண்பாடென்று
குறைபாடு காணாதீர்
தரமான சேதியென்றால்
அறிவது நல்லது தானே!

வெந்நீர் ஊற்றுக்கள்
எண்ணிக்கையில் அதிகம்
பனி படர்ந்த
ஐஸ்லாந்து நாட்டில்

கண்பார்வை இல்லார்க்கு
கைகொடுக்கும் எழுத்துக்களை
கண்டுபிடித்த பிரெய்லி
கண் தெரியா ஒரு குருடர்

மனங்களை ஈர்த்து
மகிழ்விக்கும் இசையின்
மாமேதை பீத்தோவன்
காது கேளாத ஒரு செவிடர்

பாலே நாட்டியத்தில்
பேரெடுத்து பெருமையுற்ற
பிரான்சின் ஸ்பைனலோ
கால்களை இழந்தவர்

தன் ஏழு குழந்தைகளை
தவிக்கவிட்டு சென்ற
தந்தை ரூசோ படைத்த நூல்
குழந்தை வளர்ப்புப் பற்றி

மண்ணில் தோன்றிய கவிஞர்களில்
மிகச்சிறந்த உமர்கயாம்
மது அருந்தியதில்லை—எழுதியதோ
மது அருந்த சொல்லி

பேச்சாற்றலில்
பாரில் புகழ் பெற்று
பிரபலமான டெமாஸ்தனிஸ்
இளமையில் திக்குவாயர்

பாலினக் கதை எழுதி
படைத்த ஹெவ்லக் எல்லீஸ்
பார்போற்றும் எழுத்தாளர்
ஒரு திருநங்கை

செல்வமிழந்து திவாலாகி
சிறை சென்ற பேக்கன் பிரபு
சிக்கனத்தை பற்றி எழுதி
சிந்தை கவர்ந்தவர்

மன வலிமையும்—விடா
முயற்சியும் இருந்தால்
முடியாதது ஏதுமில்லை

ஊனமும் ஒரு தடையில்லை

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

வேதனை தான்




இனம் இனம் என்று கூறி
ஈன செயலில்
ஈடுபடும் மனித இனம்
தன்னைத் தானே
அழித்து மடிய
அரசியலும், ஆணவமும்
தானே காரணம்

பூமியில் பிறப்பெடுத்த
ஏது விலங்கினமும்
தன்னினத்தை வெறுத்து
அழித்துக்கொள்வதில்லை
நாயைத் தவிர,
அது தன்னினத்தை வெறுக்கும்
மனித இனத்திடமிருந்து
கற்றுக் கொண்டதால்

சிந்திக்க தெரிந்த மனிதன்
சிந்திக்க மறந்து
விலங்கைப் போல் ஆனாலும்,
விலங்குகள் தன்னினத்தை
வீனாக அழித்து
மடிவதில்லை என்பதை
உணரவேண்டாமோ?

மனித இனம் போல்
மண்ணில் உயர்ந்த இனம்
வேறு ஏதுமில்லை,
ஆக்கவும், அழிக்கவும்
அறிந்த மனிதன்
தன்னினத்தைத் தானே

அழிப்பது வேதனை தான்.

ஆன்மீகம்




ஒன்றே குலம்
ஒருவனே தேவனென
அறியவைக்கும் ஆன்மீகம்
அடக்கமானது,
அக வாழ்க்கையை
செம்மையாக்குவது

தன்னைப் பற்றி
அறிந்து கொள்ள
உதவும் ஆன்மீகம்,
வாழ்க்கைக்கு
எதுயெது தேவையற்றது
என்பதையும் உணர்த்தும்

மனித நேயம் தழைக்க
மக்களுக்கு அன்பையும்
அஹிம்சையையும்
அளித்துக் காத்திடும்,
பிற உயிர்களுக்காக
இரங்குதலே ஆன்மீகம்

உயர்கல்வி இளமைக்கு
சிறப்பு தருவது போல்
ஆன்மீகம்
முதுமைக்கு அமைதியும்
நிம்மதியும் தந்து
உயர்வளிக்கும்

எங்கும் நிறைந்திருக்கும்
எம்பெருமானை
செயல் தூய்மையோடு
தனக்குள் தேடி
அடைவது தான்

உண்மையான ஆன்மீகம்

திங்கள், 21 செப்டம்பர், 2015

தாயோடு போய்விடும்




இறைவன்
எல்லா இடங்களிலும்
இருக்க முடியாதென
அன்பின் உருவான
தாயை படைத்தான்

கோவிலில் வீற்றிருக்கும்
கடவுள் கூட
கூப்பிட்ட குரலுக்கு
வரமாட்டான்
தாய் நிச்சயம் வருவாள்

பிறந்த குழந்தை—முதலில்
அறிந்து கொள்வது
அன்னையைத்தான்,
காக்கைக்குத் தன்
குஞ்சும் பொன் குஞ்சு தான்

உலகில் அழகுமிக்கக்
குழந்தை ஒன்றே
ஒன்று தான் உண்டு
அதை ஒவ்வோர்
தாயிடமும் காணலாம்

கருவாக்கி உருவாக்கி
வளர்த்து ஆளாக்க
தன்னை மெழுகாக்கிக்
கரைபவளும்
தாய்க்கிணை தாயே தான்

தாவரத்தின் ஆதாரம்
வேரைப் போன்று
குடும்பத்தின் ஆதாரம்
தாயைத் தவிர
வேறு யாருமில்லை

உற்றார் உறவினர்கள்
வெறுத்து ஒதுக்கினாலும்
எந்த நிலையிலும்
தாய் தன் பிள்ளையைக்
கை விட மாட்டாள்

தேரோடு திருநாள்
போனது போல்
மண்ணில் பிறந்த
உயிர்கட்கு—அன்பு

தாயோடு போய்விடும்