புதன், 22 ஆகஸ்ட், 2018

என்றும் வாழும்




விளைச்சல் தரும் விதைகள்
விவசாயிகளின் வாழ்வாதாரம்
என்றிருக்கையில்
கன்றின் விதைகளை மட்டும்
கிட்டிக் கொண்டு நசுக்கி
சிதைப்பது முறையோ!
கண்டு பிடித்தது யார்?
கல்நெஞ்சக்காரனாஇல்லை
கூலிக்கு மாரடித்தவனா?

காளை கன்றுகளுக்குக்
கசையடித்தபோதும்
கொம்புகளை தீய்த்தபோதும்
காதுகளை அறுத்தபோதும்
உடலில் சூடு வைத்தபோதும்
கன்றுக்குட்டி கடும் வேதனையில்
கதறியிருக்குமே, பாவமில்லையா!
அத்தனையும் சகித்து வளர்ந்தன
அன்றைய காளைக்கன்றுகள்

அனைத்தையும் கன்றுகள் மறந்து
அடிமைகளைப்போல்
உழவர்களின் வயல் வேலைக்கு
உறுதுணையாயிருக்கும்,
உறவான பசுமாடோ
அன்னையைப்போல
அனைவரையும் பாலூட்டி வளர்க்கும்
மனித நேயம் மறைந்தாலும்--நெஞ்சில
மாட்டு நேயம் என்றும் வாழும்

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

பாதிப்பு இப்ப அதிகம்




அந்த காலத்தில்
அச்சாணி இல்லாமல்
தேர் ஓடாது
என்பதால் தானோ
அச்சாணியை அகமுடையானோடு
ஒப்பிட்டார்கள்

ஓடும்போது தேரின்
அச்சாணி முறிந்தால்மேலே
அமர்ந்திருப்பவர்களுக்கு
பாதிப்பு ஏற்படும் என்பதால்
பால்ரஸ்,கிரீஸ் உபயோகித்து
புதிய வழி கண்டார்கள்

அச்சாணி அகன்றதுபோல்
அகமுடையானும்
குடிக்கும் பழக்கத்தை
புதிய வழியெனக் கொண்டானோ!
வாழ்க்கை தேருக்கு தான்
பாதிப்பு இப்ப அதிகம்

நிற்க வைக்கும்




நீண்ட புல் என்றாலும்
நிழல் தராது
ஆனால் ஆடு, மாடுகள்
அந்த புல்லை மேயும்
பால் சுரக்கும்
பசுவின் மடி நிரம்பும்,
கறக்கும் பாலை
குடிக்கும் மக்களுக்கு
சீமைப்புல்
சத்து உணவாகும்
நிழல் தராத புல்நம்மை
நிமிர்ந்து நிற்க வைக்கும்


தெரியாதா தனது குறை!




குற்றம் புரியாத மனிதன்
புவியில் எங்குமில்லை,
நிறை, குறை தெரியாமல்
குறை கூறலாமோ!
குறை கூறும் நெஞ்சம்
கறை படும்,
குற்றம் பார்க்கில்
சுற்றமில்லை

தன்னோட முதுகு
தனக்கு தெரியாததுபோல்
ஊசியை பார்த்து
சல்லடை சொன்னதாம்
ஊசிக்கு வாயில
ஓட்டையென்று,
ஏதும், அறியாமல்
ஏளனம் செய்யலாமோ!

ஊசிக்கு ஒரு ஓட்டை
உளறிய சல்லடைக்கோ
உடம்பெல்லாம் ஓட்டைகள்,
ஊசியோ இரு துணிகளை
ஒன்றிணைக்கும்,
தேவையற்ற குப்பைகளை
தக்கவைக்கும் சல்லடைக்கு
தெரியாதா தனது குறை?


ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

சாட்சிகளானது.


தெரு விளக்கு இல்லாத அன்று
பேய், பிசாசு நடமாடுமென்று
பாட்டிமார்கள் சொன்னது
பாடமாகிப் போனதால்
ஊர் மக்கள் எல்லோரும்
வெளியே வர பயந்தார்கள்,
பக்கத்து ஊருக்கு போகக்கூட
பகலில் தான் பயணங்கள்

பாதைகள் முன்பெல்லாம்
பக்கத்து ஊர்களுக்கு வழி காட்டும்
பகவானை வேண்டிக்கொண்டு
பத்திரமா போய் வருவார்கள்,
இப்போதெல்லாம் பாதையில்
பேய், பிசாசுகளெல்லாம்
நிசமாக வீழ்ந்து கிடப்பதால்
இறைவனும் நடமாட அஞ்சுகிறான்

போதை ஏத்தும் சரக்கால                                                
பாதையில் கிடக்கும் குடிமக்கள்
போக்கத்துபோன வழித்தடங்கள்,
அடுத்த ஊர் கூட
அண்டை நாடுபோல
அந்நியபட்டு போனதால்
சண்டை, சச்சசரவுகள்அன்றாட
காட்சிகளாகி, சாட்சிகளானது



ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

மனிதம் தழைக்க.




பாட்டி வீட்டுக்கு வந்த பேரன்
பள்ளி விடுமுறை முடிந்து
தன் ஊருக்கு திரும்பி
தனியே போகப்போறான்,
வழியனுப்ப வந்த பாட்டியுடன்
வம்பு பேசிக்கொண்டேசென்றான்

பாட்டியின் கன்னத்தில்
பேரன் முத்தமிட்டான்—இன்னும்
சிறிது நேரத்தில் பேரன்
பிரியப்போகும் துயரம்
பாட்டி மனம் நெகிழ்ந்தது
கண்கள் கலங்கின

பேருந்து நிலையம்
பேரு மட்டுந்தான்—இங்கு
வேறு எதுவும் இல்லை
மரங்களுண்டு, நிழல் தரும்,
மழை வந்தா ஓடிப்போய்
ஊரு சனத்தோடு ஒட்டிக்கனும்

பேரன் பேருந்தில் ஏற
பேருந்து புறப்பட்டது,
போகும் பேருந்தை பார்த்தபடி
பாட்டி புறப்பட்டு போகும்போது
கல் இடறி காலில் உதிரம் கசிய
கண்கள் கலங்கின—புரியல
காரணம் எதுன்னு?

பேரனின் வம்பு பேச்சுக்கள்
செய்த குறும்புகள்
நெஞ்சிருக்கும் வரை—பாட்டிக்கு
நினைவிருக்கும்
இந்த மாதிரி வழியனுப்புதல்
இப்போது இருக்குதா?

மேகம் சுரக்கும் மழை
தாகம் தணிக்கும்,
விழி சுரக்கும் நீர்
வேதனையைப் போக்கி
வழி காட்டும்
மனிதம் தழைக்க



சனி, 11 ஆகஸ்ட், 2018

மனிதனின் காலடியில்




நாளும் ஒரு போராட்டம்
நடுத்தெருவில் வாசம்
கண்ணிமைகள் மூடாமல்
கனவுகள் தொலைந்ததோ!

கனவு கான சொன்ன
கலாம் அவர்களின்
கண்கள் மூடியதால்மக்கள்
கனவுகளை மறந்தார்களோ!

உலக முன்னேற்றம்
முடங்காமலிருக்கக்
கருவிலிருக்கும் குழந்தை
கனவு காணுதோ!

கனவுகள் இல்லாமல்
எதிர்பார்ப்பு ஏது?
ஏதிர்பார்ப்பு இல்லாமல்
ஏற்றம் உண்டோ?

புதுப்புது கனவுகள்
பூமியைப் புதுப்பிப்பதால்
மண்ணும், விண்ணும்
மனிதனின் காலடியில்



வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

கெடுத்து விடும்




அமைதி இருக்குமிடம்
இறைவன் வாழுமிடம்,
ஒரு சிறு புன்முறுவலில்
ஓடி வருவான் இறைவன்
உன்னிடம்

இகழ்பவரை இகழ்ந்திட
அறிவு தேவையில்லை,
அமைதியாயிருங்கள்
அதுதான் அறிவு
அறிவே தெய்வம்

ஆசைக்கும், உணர்ச்சிக்கும்
அடிமையாகாமல்
அறத்தோடு வாழ்ந்தால்
அதுதான் இன்பம்,
இன்பம் அமைதி தரும்

குற்றம் பார்க்கின்
சுற்றம் மட்டுமல்ல
அமைதியும் நிலைக்காது,
உனக்கு அமைதியை
உன்னால் தான் தரமுடியும்

அமைதி வேண்டுமானால்
கண், காதுகளிடம்
கருணை காட்ட வேண்டுங்கள்,
நாக்கை மட்டும் நீட்டாதீர்கள்—அது
அமைதியைக் கெடுத்து விடும்

மண்ணும் மரியாதை பெறும்




ஆண்டவனைத் தொழுது
அருள் பெற உதவுவது
அன்பு, அகிம்சை என்ற
இரண்டும் தான்மனதுக்கும்
அமைதி தரும்

அந்நிய ஆதிக்கத்தை
அகற்றியது அகிம்சை,
அடிமைகளின் விடுதலைக்கும்
எழுச்சிக்கும் உதவியது
அன்பும், அகிம்சையும் தான்

பழிக்கு பழியென்றால்
பாவம் வந்து சேரும்எப்போதும்
பின் தொடரும்,
அன்பும், அறமும் உடையோன்
அகிலம் ஆள்வான்

நீயும் வாழு,
பிறரையும் வாழவிடு,
மன்னிக்கும் சுபாவமும்
மனிதநேயமும் இருந்தால்
மண்ணும் மரியாதை பெறும்