வியாழன், 17 ஜூலை, 2014

இதனாலன்றோ!


வையத்து மாந்தருக்கு

வாழும் நெறிமுறையை

வழங்கிட்ட திருக்குறள் போல்

அகிலத்தின் அத்தனையும்

அள்ளியெடுத்து வந்து

வாழ்வளிக்கும் கணினி..

 

வெள்ளை நாட்டில் பிறந்து

உலகம் சுற்றி வரும்

மங்கையை கை பிடிக்க

வரதட்சணை அதிகம்—என்றாலும்

சேர்ந்து உழைப்பதால்

வேளையின் பளு பாதி தான்.

 

அள்ள அள்ள கொடுக்கும்

அட்சய பாத்திரம் போல்

கேட்டதெல்லாம் கொடுத்து

கனவுகளை நிசமாக்கும்

விஞ்ஞானம் கண்டெடுத்த

வினோதப் பரிசு.

 

விரலின் அசைவாலே

விந்தையாய் நம் மனசு

விலங்குபோல் அடிமையாகும்,

இவளோட மேனி

இளைத்து இருந்தாலும்

அறிவு பெருகியிருக்கும்.

 

வாழ்க்கையை எளிதாக்கி

சிந்தித்த மூளையை

செயலிழக்கச் செய்ததும்,

தரங்கெட்ட வலைதளத்தால்

சிறியோரும், இளைஞர்களும்

சீரழிந்து போவதும் இதனாலன்றோ?

 

புதன், 16 ஜூலை, 2014

உன்னோடுதான் வாழ்ந்திருப்பேன்.


வாசம் வீசும் மல்லிபோல

உன்னோட மனசிருந்தும்

வாடிவிட்ட உடலாலே

வலுவிழந்து நிற்கையிலே

 

வாசலுக்கு வந்துவிட்ட

காலனுக்கும் கருணை இல்ல

காலமெல்லாம் தொழுதிருந்தும்

கடவுளுக்கும் ஈரமில்ல

 

உயிருக்கு போராடி

உதிர்கின்ற மலர்போல

விழிமூடும் வேளையிலும்

என்(னை)ன  நினைத்தாளோ?

 

தான்பெற்ற மகளை

தனக்கருகில் வரச்சொல்லி

அப்பாவை பார்த்துக்கோவென

கண்கலங்கி சொன்ன வார்த்தை

 துணையாய் வாழ்ந்திருக்கும்

 

எம்மனசில் நீயொருத்தி

எப்போதும் நிறைஞ்சிருப்பே

இன்னுமொரு பிறப்பெடுத்தால்

 உன்னோடுதான் வாழ்ந்திருப்பேன்.

 

ஞாயிறு, 13 ஜூலை, 2014

மஞ்சள் கயிறை மணமுடிக்கும்


மண்ணில் பிறப்பெடுத்து
செந்தீயில் உருவெடுத்து
மங்கள நாளை எதிர்பார்த்து
ம‌ண‌ம‌க‌ளை அல‌ங்க‌ரித்து
ம‌ண‌மேடையேறி
ம‌ரியாதை பெற்ற‌ நீ
வ‌ச‌தியில் ம‌தி ம‌ய‌ங்கி
பொற‌ந்த‌ இட‌த்தை ம‌ற‌ந்து
உய‌ர்ந்த‌ இட‌த்தில் அம‌ர்ந்தாயோ?

இனம் இனத்தோடு சேர்வது போல்
என்றும் உன் உறவு
பணம் இருப்பவரோடு.
ஏழையை ஏங்கவைத்து
எட்டாத உயரத்தில்
எப்போதும் நீயிருந்தால்
புனிதத் தாலி கூட
மனம் மாறி விவாக‌ர‌த்தில்
ம‌ஞ்ச‌ள் க‌யிறை ம‌ண‌முடிக்கும்.

இறுமாப்பு உன‌க்கெத‌ற்கு?
ஒன்று தெரியுமா உனக்கு?
தனித்தங்கம் மலடு
உண்மை, கருத்தரிக்காது.
செம்போடு நீ சேர்ந்தால்
உன்னோடு புகழும் உயரும்
மங்காத நகையையும்
பெற்றெடுக்க‌ முடியும்

கீழிறங்கி வருவாயென‌
கீழே நின்று செம்பு
நித்தம் தவம் செய்து
எப்போதும் காத்திருக்க‌
இற‌ங்காம‌ல் நீ
பிடிவாத‌ம் செய்வ‌து
ம‌னித‌ர்க‌ளைப்போல்
வ‌ர‌த‌ட்ச‌னை வேண்டியோ?

 

தெரிந்து கொள்ள.


உலகத்தின் இயக்கம்

இதனின் துவக்கம்,

முடிவற்ற தேவைகளின்

முகவரியற்ற எல்லையது,

இருபாலோடு சேர்ந்தாலும்

முப்பாலுக்கும் வித்து அது.,

தனிமை தேடலுக்கும்

துணையாய் வந்துதவும்,

வார்த்தை சிறிதென்றாலும்

விலையோ மிகப்பெரிது,

மூச்சு உள்ளவரை

முடங்காமல் உடனிருக்கும்,

கண் மூடும் வேளையிலும்

எதையோ தேடி நிற்கும்,

என்னவென்று சொன்னால்

தெரிந்துகொள்ள

எனக்கும் ஆசைதான்.

செவ்வாய், 8 ஜூலை, 2014

சொர்க்கம்.


தெய்வத்தின்
நிழலான தாயின்
கருவறையின்
மனநிறைவும்

தானாடாவிட்டாலும்
தசையாடும்
உறவுகளின்
சொந்த பந்தங்களும்

கண்கள் நான்கும்
இதயங்கள் இரண்டும்
இணையும் மணவறையின்
அன்பு காதலும்

ஆடிமுடித்து
அடங்கி படுத்த‌
கல்லறையின்
முழு அமைதியும்

எங்கு கிடைக்கிற‌தோ
அதுவே சொர்க்க‌ம்!

 

திட்டாமல் விட்டதில்லை.


எத்தனையோ வீடிருந்தும்

அத்தனையும் போதாதுன்னு

சின்ன வீடு ஒன்னு சேர்த்து

சேர்த்ததெல்லாம்

தொலைச்ச பின்னே,

தெருத்தெருவாய் திரிந்து

கையேந்தி நிற்கையிலே

தன்னோட குறை மறந்து

காசு கொடுக்காமல்

போன அந்த மனிதர்களை

கொடும் பாவிகளென
திட்டாமல் விட்டதில்லை

புதன், 2 ஜூலை, 2014

வீழ்ந்ததுதான் எழுந்திடுமா?


தண்டிக்க எண்ணி

தண்ணீரில்லா காட்டுக்கு

அனுப்பி வைக்கும்

இக்காலத்தில்

 

நீர் நெறஞ்ச இடத்தில்

குடியமர்த்த வேண்டி

கோடி கோடியாய்

கொட்டித்தான் கட்டினாறோ?

 

பணத்தாசை தலைக்கேற

பாரம் தாங்காமல்

பொல பொலன்னு

இடிந்து வீழ்ந்ததுவோ?

 

உன்னோட சரிவுக்கு—ஊரு

ஒன்னொன்னா சொன்னாலும்

உள்ளம் தான் ஏற்குமா?

உடன்பிறப்பு நிற்குமா?

 

உருவாக்கிய செல்வங்கள்

உயிருக்கு தவிக்கையிலே

சேர்த்தெடுத்து செல்லாமல்

காத்தருள வேண்டாமோ?

 

வளரும் பருவத்தில்

வழிகாட்டி காக்காமல்

ஆயிரம் தான் செஞ்சாலும்

வீழ்ந்ததுதான் எழுந்திடுமா?