வெள்ளி, 24 ஏப்ரல், 2020

தொலைத்து விடும்





நீதி நிமிர்ந்து
நிற்கும்,
நிதியிடம்
நேசமானால்
நேர்மையை
தொலைத்து விடும்


மண்ணில் இடமிருக்குமா?




புதுமைப் புரட்சியால்
பெட்ரோலுக்கு
போராடிய காலம் மாறி
சூரிய ஒளி மின்சாரத்தால்
செயல்படும் இயந்திரங்கள்
ஆளில்லா ஊர்திகள்
அனைத்தும் காலத்தின் புதுமை

கொல்லைப்புறமாக வந்த
கொரோனா வேறு
சொந்தம் கொண்டாடி
புதுமையா வந்ததுபோல்
பூலோகத்தில் கால் பதித்து
மானுடத்தை வஞ்சித்து
மனித உயிர்களை அழிப்பதும்

புதுமைகள் நிச்சயம்
புரட்டி போடும் மானுடத்தை
உயிருக்கும், வேலைக்கும்
உத்தரவாதம் இல்லாதபோது
உடலும், உயிரும் சேர்ந்து வாழுமா ?
மண்ணில் இடமிருக்குமா
மனித உடல்களுக்கு ?

சிந்திக்கவில்லை




ஊருணியின் ஓரத்திலே
உசந்து நிற்கும் ஆலமரம்,
ஆலமரம் தலைகுளிச்சு
அமைதியாய் நின்னாலும்,
தலையை காயவைக்க
தவமிருக்கும்
கதிரவனின் வரவுக்கு ,
கிளைகளிலுள்ள
இலைகளில் இருக்கும்
மழை நீரோ
மீண்டும் நீராட
துளித்துளியாய்  ஊருணியை
தொட்டு மகிழும்,
தொட்டவுடன் ஆலமரமே
ஆடிப்போகும்,
அசைந்து விட்ட
குளத்து நீரில் .
ஒரு சிறு துளிதான்
ஓசையின்றி  அசைத்தது,
மனிதன் தான் தன்னை இன்னும்
முழுமையாய் உணரவில்லை
சிந்திக்கவில்லை.

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

போய் சேர்ந்தாள்





பிறப்பெடுத்த பெண் சிசுவின்
பூ முகம் பார்க்காம
பெத்தவளே தவிக்கவிட்டு
பரிகாரம் தேடி
பாடையில ஏறினாளோ !

பச்சிளம் சிசுவென
பாழும் மனசு நினைக்கலையே
பொண்ணா பொறந்தாலே
பூமியில படும் பாட்டைகாணப்
பொறுக்காம போனாளோ

தூக்கி வளர்த்து ஆளாக்க
தாயாய் வந்த சித்தி
கால ஓட்டத்தில்
கல் நெஞ்சம் கொண்ட
கூனியானாள்பெண்ணோ
பெற்றவளிடமே போய் சேர்ந்தாள்

கெடுக்க நினைக்காது





மனித வாழ்க்கை தரம் உயர
மானுடம் உருவாக்கியது
அறிவு ,சிந்தனை , மொழியாகும்
இத்தனையும் பெற்றபின்
வேற்றுமையை உருவாக்கி
ஒற்றுமையைக் கெடுத்து
அடித்துக்கொண்டு அழிந்தால்
மானுடம் சிறக்குமா ?

மனித நேயத்தை இழந்து
மிருகமாக மாறும் மனிதர்களென
விலங்குகளோடு ஒப்பிட்டால்
விலங்குகளுக்கு அது அவமரியாதை ,
மானுடத்தை விட மிருகங்கள்
மேன்மையானது –பசி
போக்கி, உயிர் வாழ வேட்டையாடும்,
கெடுக்க நினைக்காது


ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

இது தான் விதி




அன்று

தனக்கு தனக்கென்றால்
நெஞ்சு படபடக்குமின்னு
தன்னலம் பார்க்காம
தங்கள் உழைப்பையும்,
பொருளையும் அடுத்தவருக்குக்
கொடுத்து உதவினார்கள்

உலக பேரேட்டில் அவர்கள்
வந்ததையும், வாழ்ந்ததையும்
வரலாற்றில் பதிவிட்டார்கள்—அது
உலகம் உள்ளளவும் நிலைத்து
மக்கள் மனதில் இருக்கும்
இது பழங்காலப் பண்பாடு

இன்று

செத்த வீட்டிலும்
சுருட்ட நினைக்கும்
கேடுகெட்ட மனிதர்கள்,
இவர்களை மாற்றியது
வறுமையின் கொடுமையா?—இல்லை
அரசியலின் அனுகூலமா?

தன்னலம் தலை தூக்க
தனக்கென முறைகேடாக
சொத்துகளைக் குவிப்பதும்,
ஈவு இரக்கமில்லாம
அடுத்தவரைக் கெடுத்து வாழ்வதும்
இன்றைய பண்பாடு, இது தான் விதி.

சனி, 11 ஏப்ரல், 2020

சுய நலம் தானே !




சுய நலம் கூடாதென
முன்னோர்கள் சொன்னது
மற்றவரைக் கெடுத்து நாம் வாழ
எண்ணக்கூடாது
என்பதற்காகவும்,

பணம் சம்பாதிக்க
பணியாற்றும்போது
இது போதாது
இன்னும் வேண்டுமென்ற
பேராசைக் காரணமும் தான்


சுய நலத்தால் உருவானது
புது, புது கண்டுபிடிப்புகள்
செல்போன், ஈமெயில்
டெலிகிராம், மின்சாரம்
எந்திர மனிதன் –மற்றும்

தொழிற்சாலைகள் பெருக
வேலை வாய்ப்புகள் அதிகரிக்க
வாழ்வாதாரத்தை உயர்த்தி
சுகமாக எல்லோரும் வாழ
சுய நலம் தானே காரணம்







கருணையில்லையா ?



நன்மைகள் குறைவின்றி
நிறைந்திருக்கும் இட த்தை
மங்களகரமான இடமென
மாண்புடையோர் கூறுவர்
மக்களும் ஏற்றனர்

சட்டங்கள் இல்லாதபோதும்
அறச் செயல்கள் மூலம் வாழும்
வாழ்வும் மங்களகரமானது
அதுபோலத்தான்
மங்களம் நிறைந்த பூமியும்

சிறு சிறு இன்னல்கள் வந்தாலும்
சீர்கெடாத புண்ணிய பூமியில்
கொரோனா எனும் கொலைகாரப் பாவி
கொத்து கொத்தாய் மாந்தரை
கொன்று அழிப்பது காலன் அறிவானா?

மங்களச் சொல் மறைந்ததேன்
மண்ணின் அறம் மாண்டு போனதா?
வாழும் மக்களிடம் அன்பு குறைந்ததா?
சுழலும் கோள்களுக்குள் சச்சரவா?—இல்லை
தெய்வங்களுக்குக் கருணையில்லையா?




ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

காய்ந்து கருகும்





காதலர் தினத்தைக்
கண்டு கொள்ளாதபோது
காதலி உயிரோடு
கூடவே இருந்தாள்

காலம் நகரும் போது
காதலர் தினமும்
வருடா வருடம்
வந்து போகும்

இறைவனுடைய
அநுக்கிரகத்தால்
ஒரு ரோசாப்பூ மட்டும்
இறக்காமல், உயிர் வாழும்

பாழும் மனசு தான்
பயிரைப்போல்
காய்ந்து கருகும்
காதலியை நினைத்து

சனி, 4 ஏப்ரல், 2020

அலை பாயும்




அலை பாயும்
விழிகளில்
இமை கூட
நடன மாடும்

ஆசையை
அடக்கம் செய்யாதீர்கள்
அழகு
உயிரோடு
வாழும் வரை.