வியாழன், 27 ஆகஸ்ட், 2020

கிரிக்கெட் வீரர்கள் தானோ !

 

இருபது இருபதில்

இந்தியா வல்லரசாகக்

கனவு காண

அழைப்பு விடுத்தவர்

அப்துல் கலாம்

முந்தைய முதல் குடிமகன்

 

முந்திக் கொண்டார்கள்

கிரிக்கெட் வீரர்கள்

இளமையும் , துடிப்பும்

அரங்கத்தையே அதிர வைத்தது

சிக்ஸர், பௌண்டரியெனபந்தை

சிதறடித்தார்கள்

 

சிதைவுறும் பாறை தான்

சிலையாகிக் கோயிலில்

விக்ரகமாகி

இறைவனாவது போல்

உலகக் கோப்பையில்

உருக் குலைந்தவர்கள்

 

இருபது இருபதில்

வெற்றி வாகை சூடி

வலம் வரும் வீரர்களாய்

வாழ்ந்து காட்டினார்கள்,

முதல் குடிமகனின் அழைப்பை

முதலில் புரிந்து கொண்டவர்கள்

கிரிக்கெட் வீரர்கள் தானோ !     

வழி காட்டுவதற்கல்ல !

 

கொரோனாவின் தாக்கத்தால்

காட்டிலும் ஊரடங்கு

கானகத்தில் வாழும் துறவியின்

கண்களில் ஒருவரும் தென்படாததால்

துறவிக்கு மன உளைச்சல்,

தனித்து இருப்பதால் தவமிருந்துத்

தெய்வத்தைக் காண விரும்பினார்

 

கடும் தவம் புரிந்து

கைலாசம் சென்றடைந்தார்அன்று

கடவுளுக்கு அங்கு ஒரு திருவிழா

கலந்து கொள்ள நிச்சயம் வருவாரென

கடவுளைக் காண்பதற்கு ஆவலோடு

கோயிலின்வாசலில் நின்று

காத்திருந்தார் துறவி

 

சிவனும், திருமாலும்

இந்து மத பக்தர்களோடு கடந்து சென்றார்கள்

அடுத்து இயேசு பிரான் செல்ல

அவரோடு கிறிஸ்துவர்களும் சென்றார்கள்

அதன் பின் நபிகள் நாயகம் செல்ல

நடந்தார்கள்முகம்மதியர்கள்பின்பு

புத்தர் பெருமான் தன் பரிவாரத்தோடு கடந்தார்.

 

கூட்டம் அனைத்தும் கோவிலைக் கடந்தது

கடைசியாக தள்ளாடியபடி வந்தவரிடம்

காத்திருந்தத் துறவி கேட்டார்

நீங்கள் தான்  கடவுளா ?

உங்களோடு ஒருவரும் வரவில்லையேஎன்றார்

அதற்குக் கடவுள்உண்மை தான்

என்னோடு யாரும் வரவில்லைஎன்று பதிலளித்தார்

 

கடவுளைக் காட்டுவதாகக் கூறி

குழுக்களாக பிரித்து விட்டார்கள்

பிரிந்தவர்கள், பிடித்தவர்களின்

பின்னால் போய் விட்டார்கள், 

மதம் எதுவாயினும், கடவுளை

மக்களுக்கு உணரச் செய்வது

மதங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்

சொர்க்கத்திற்கு வழி காட்டுவதற்கல்ல

 

 

                          

வாழ வைக்கும்

 

ஆட்டி படைக்கும் இறைவன்

ஆட வைத்து விளையாட

வாழும் உயிர்களுக் கெல்லாம்

வரமாகத் தந்தது இரு கண்கள்

ஒரே பணி தான் இரண்டுக்கும்

 

இரு கண்களால் பார்த்தாலும்

இல்லை ஒரு கண்ணை மூடி

மறு கண்ணால் பார்த்தாலும்

மாறுபடாது காட்சிகள்

மாயவனின் திருவிளையாடலது

 

அதுபோலத்தான் மாந்தருக்கு

அவன் படைத்த உடலும், உள்ளமும்

இவை இரண்டும் ஒற்றுமையாய்

இரு கண்களைப்போல் செயல் பட்டால்

என்றும் வாழ்வில் நிம்மதி தான்

 

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசாமல் ஒற்றுமையாய்

இரண்டும் ஒன்றையே பேசினால்

அடுத்தவரையும் வாழவைக்கும்

உன்னையும் வாழவிடும்

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

தர்மமாகும்


பாரம்பரிய பெருமை கொள்ளும்

பழமையான தென்னகம் ,

வள்ளுவனை முன்னிருத்தி

புகழாரம் சூட்டிக்கொள்ளும்

புராதன தமிழகம்,

சட்டமும், காவலும் மக்களுக்கு

சத்தியம் காக்கும் சாமிகள்

 

திருவிழாவில் பங்கேற்பதுபோல்

நீதியின் வளாகத்திலேயே

ஏன் இந்த வெறித்தனம் ?

அரசியலா ? இல்லை

அதிகார போராட்டமா ?

பாமர மக்களுக்கு வழிகாட்ட வந்த

படித்த நீங்கள் , நெறி படுத்தாமல்

 

வழிமாறி தாக்கிக் கொண்டால்

வேலியே பயிரை மேய்வதாகாதா ?

நியாயம் வேண்டி இனி

நீதி மன்றம் யார் வருவார் ?

நம்பிக்கை வருமா ?

நீதி மன்ற நேர்மை தான்

நிலைக்குமா?

 

மனித நேயம் மதிக்கப்படாதபோது

சட்டம், ஒழுங்கு மட்டுமல்லதமிழ்

சமுதாயமே தலை குனியும்

யார் இதற்கு பொறுப்பு ?

யார் குற்றவாளி ?

தெரியாமல் இருப்பதே

தர்மமாகும்


ஒப்புக் கொள்வதுமில்லை

 

இளம் மனைவி ,

ஏதும் அறியாக் குழந்தை

இருவரையும் விட்டுப் பிரிவது

ஞானம் பெறுவதற்கு என்பதால்

இளவரசருக்கு பரவாயில்லை

என்றாலும், இல்லாளிடம் கூட

சொல்லாமல் போனது

சரியென்றாகாது

 

புத்தரை போற்றுகிறோம்ஆனால்

புத்தர் கானகம் போன பின்பு

பாவம் துணைவியார் யசோதரா

வாழவேண்டியவள்

வாழமுடியாமல்

ஒற்றைக் குழந்தையுடன்

வாழ் நாளைக் கழித்தது

வேதனை யல்லவா !

 

அனைத்தையும் துறந்த புத்தன்

இன்னல் ஏதுமின்றி

துறவியானான்ஆனால்

தன்னருகில் கணவன் இல்லாததால்

தலையை மழித்துக் கொண்டாள்,

ஆடையை அலங்கோலமாக்கி

ஆசைகளைத் துறந்தாள்

துறவிபோல் ஆனாள்

 

எல்லா வசதிகளும் இருந்து

எல்லாத் துயரையும்

அநுபவித்தபடி துறவியாய் ,

யசோதரா வாழ்நாளைக் கழித்தாள்

யார் துறவி ? எது கடினம் ?

பெண்களின் தியாகங்களை

எவரும் போற்றுவதில்லை ,

ஒப்புக் கொள்வதுமில்லை