வியாழன், 20 ஆகஸ்ட், 2020

ஒப்புக் கொள்வதுமில்லை

 

இளம் மனைவி ,

ஏதும் அறியாக் குழந்தை

இருவரையும் விட்டுப் பிரிவது

ஞானம் பெறுவதற்கு என்பதால்

இளவரசருக்கு பரவாயில்லை

என்றாலும், இல்லாளிடம் கூட

சொல்லாமல் போனது

சரியென்றாகாது

 

புத்தரை போற்றுகிறோம்ஆனால்

புத்தர் கானகம் போன பின்பு

பாவம் துணைவியார் யசோதரா

வாழவேண்டியவள்

வாழமுடியாமல்

ஒற்றைக் குழந்தையுடன்

வாழ் நாளைக் கழித்தது

வேதனை யல்லவா !

 

அனைத்தையும் துறந்த புத்தன்

இன்னல் ஏதுமின்றி

துறவியானான்ஆனால்

தன்னருகில் கணவன் இல்லாததால்

தலையை மழித்துக் கொண்டாள்,

ஆடையை அலங்கோலமாக்கி

ஆசைகளைத் துறந்தாள்

துறவிபோல் ஆனாள்

 

எல்லா வசதிகளும் இருந்து

எல்லாத் துயரையும்

அநுபவித்தபடி துறவியாய் ,

யசோதரா வாழ்நாளைக் கழித்தாள்

யார் துறவி ? எது கடினம் ?

பெண்களின் தியாகங்களை

எவரும் போற்றுவதில்லை ,

ஒப்புக் கொள்வதுமில்லை

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக