சனி, 28 செப்டம்பர், 2019

ஈடாகுமோ!




கருத்த மேகத்தை வானில்
கட்டியணைத்த சூரியனால்அவள்
கால் விரல் போட்ட
கோலம் வானவில்லானது அழகு

காலைக் கருக்களில்
கடமை தவறாமல்
குரலெழுப்பி இசைக்கும்
குயிலின் கானம் அழகு

ஆழ்கடலும் அதனோடு சேரும்
ஆலங்கட்டி மழையும்
ஆலோலம் பாடி விளயாடும்
அற்புதக் காட்சி அழகு

பகலவனின்  பார்வைக்கு
பயந்து போன அருவி
துள்ளிக் குதித்து விழுந்து
வெள்ளிச் சரமாவது அழகு

வனத்தில் முகமலர்ந்து
வாசத்தைத் தூதுவிட்டு
வசந்தத்தை வரவேற்கும்
வண்ணப்பூக்கள் அழகு

உணவுக்கு அழும் குழந்தைக்கு
ஒருநாள் வயிறு நிறைந்தால்
முல்லை மலர் போல
பூக்கும் சிரிப்புக்கு ஈடாகுமோ!

செதுக்கிய சித்திரம்




அரும்பெரும் காப்பியம்
அகிலம் புகழும் வண்ணம்
தொன்மையும், புதுத்தன்மையும்
கொண்ட அறிய நூல்
இலக்கிய வரலாற்றில்
சிகரம் தொட்ட இசைக்கழல்

தமிழகம் விளைபுலமானதால்
தமிழ் மரபும், மாண்பும்
தழுவிக்கொண்டதுசாதாரண
மக்களின் வாழ்வை
மகுடத்தில் ஏற்றி பெருமை சேர்த்த
மகத்தான காப்பியம்

கானல் வரியில் காதல்
குன்றக் குரவையில் வியப்பு
வேட்டுவ வரியில் வீரம்
வரிப்பாட்டில் மகிழ்வென
அத்தி பூத்தாற் போலொரு
அறியதற்கரிய நூல்

காலில் அணியும்
காற்சிலம்பின் பெயரை
சூடிக்கொண்டாலும்,
முடிமன்னரைப் பாடாது
குடி மக்களின் வாழ்வுதனை
பண்பாடு சிதையாமல்பார்த்து
பார்த்து செதுக்கிய சித்திரம்

சனி, 14 செப்டம்பர், 2019

உனது கையில்




மனமும், உடலும்
மகிழ்வோடு இருக்க
முன்னோர்கள்
மோட்சம், சொர்க்கம் என
கடவுளையும், மதங்களையும்
கும்பிடச் சொன்னார்கள்

ஒருவரின் மன நலமும்
உடல் நலமும் பிறரிடமிருந்து
எடுப்பதுமில்லை
கொடுப்பதுமில்லை,
புவி வாழ் உயிர்கள் அனைத்தும்
போராடிப் பெறுபவை

விதைகளுக்குள்ளும்
உயிர் உள்ளதுமண்ணால்
விதையை மூடினாலும்
விதையின் உறை
உயிரை பத்திரமா பாதுகாத்து
புத்துயிர் பெற வைக்கும்

உருமாறும் செடி
புது வாழ்வு தொடங்கும்,
கூண்டிலிருக்கும்
கிளிகளும் போராடித்தான்
வெளி வந்து
விடுதலை பெறவேண்டும்

நீ முக்தி பெறுவதற்கும்
பிறர் உதவ இயலாதுநீயாக
அடிமை ஆகாதவரை
யாரும் உன்னை
அடிமையாக்க முடியாது
உன் சுதந்திரம் உனது கையில்

யாரோட பாவமிது ?




படிதாண்டா பத்தினி போல்
பத்திரமா பாதுகாத்து,
அடுத்த வீடு போகாம
அடைத்து வைத்த
ஆற்று நீருக்கு
ஆகாதவளைப்போல்
பருவ பெண்ணாட்டம்
பருவ மழை புகுந்து
படுக்கையில பங்குபோட,
புலம்பி தவித்த பத்தினியோ
பொல்லாத நேரமின்னு
யாரையும் நம்பாம
எங்கும் ஒதுங்காம
ஓங்கிக் குரலெழுப்பி
ஓடிக் கடலில் குதித்து
உயிரை விடுவது

யாரோட பாவமிது ?

புண்ணியம் யாருக்கு?




உயிருக்கு உயிரான
உற்ற நண்பர்கள்
அருகம்புல்லாட்டம்
அருமையான மனிதர்கள்,
இறைவனை வேண்டி
இறையருள் பெற நினைக்கும்
இரு முதியவர்கள்

மரணத் தருவாயில்
மண்டியிட்டு அழுது
புலம்புவதைவிட,
வாழும்போதே
வழிபட்டு பெறும் வரம்
புனிதமானது
புண்ணியம் கிடைக்குமென

வெளி நாட்டவரும்
எதையோ எதிர் பார்த்து
வந்துபோகும் காசிக்கு சென்று
விசுவநாதரை வழிபட
முதியவர்கள் இருவரும்
முடிவெடுத்து புறப்பட
இருந்த வேளையில்

இருவரில் ஒருவர் சொன்னார்நாம்
இருவருமே தளர்ந்தவர்கள்
போற வழியில் ஒருவர்
போய் சேர்ந்து விட்டால்
மோட்சம் அவருக்குக் கிடைத்தாலும்
அடுத்தவரின் கதி
அதோ கதிதானே!

சனி, 7 செப்டம்பர், 2019

சிறந்ததல்லவா!



நாளை என்பது
நிலையானதல்ல
நாளை என்று வரும்போது
இன்றாகவே மாறிவிடும் --அதனால்,
காலக்கணக்கில் வராதது,
கடைகளில் எழுதப்பட்டவை
இன்று ரொக்கம்,
நாளை கடன் என்று எழுதி
நம்மை ஏமாற்றுகிறார்களோ!

விரும்புகிற வாழ்வையும்
அறத்தையும்,
இன்றே செய்திடல் நன்று
நாளையே வராதபோது
நாளை நம் இருப்புக்கு
என்ன நிச்சயம்?
இன்று செய்யும் வினைகள்
நீங்கள் தளர்ந்து நிற்கும்போது
உங்களுக்கு துணையாக
உதவலாம் அல்லவா!

மூப்பும், சாவும் கண்ணுக்கு
முன்னால் வந்து நிற்கும்,
அழிக்கும் நோய்கள்
வரிசைகட்டி நிற்கும்
ஆதலால் நற்காரியங்களை
இயலும்போதே செய்திடுங்கள்,
நாளைக்கும் வராத
நாளையைக் காட்டிலும்
இன்றைக்கு இருக்கிற

இன்று சிறந்ததல்லவா

வழிகாட்டுவதில்லை




அதிகாலைப் பொழுது
ஆதவனை  துணைக்கு தேடாமல்
நடை பயிற்சிஅப்பொழுது
ஒரு மனிதன் கைவண்டி
ஒன்றை இழுத்து சென்றான்
கூர்ந்து கவணித்ததில் அவன்
ஒரு கிரிமினல் கைதியாக
இருந்தவன்

களவுத் தொழிலை விட்டு
உழைக்க ஆரம்பித்தது
எனக்கு மகிழ்ச்சி என்றேன்,
அதற்கு அவன்
இந்தக் கைவண்டியையும்
திருடி தான் எடுத்து செல்கிறேன்
என்றான்
உண்மையோ, பொய்யோ!

பலமுறை  தவறிழைத்தவர்கள்
பிறர்  அவர்களைப்
பாராட்டுவதாக எண்ணி
தவறு செய்து பிழைக்கிறார்கள்,
திருடுகிறவர்களை
திருத்தமுடியாமல் ஒதுங்குகிறோம்
இல்லை உதவுகிறோம்,--முறையாக
வழிகாட்டுவதில்லை.