ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

வெளிப்பாடா!




வைத்த பொருள்
வைத்த இடத்தில் இல்லாததால்
வேதனை பட்டு
உறவுகளைக் குறை சொல்லும்
முதியவருக்கு வயது எண்பது

உங்கள் அறைக்கு
ஒருவரும் போகவில்லை
யாரும் எடுக்கவில்லை என்றாலும்
பெரிசு ஏற்கமறுத்துமீண்டும்
மீண்டும் தேடுவது வாடிக்கை

மறதியால் தான்
மறுபடியும் தேடுகிறோமென்பதை
மறந்து போனாரா!—இல்லை
இன்னும் இளமையோடு
இருப்பதைக் காட்டும் வெளிப்பாடா!

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

உன்னோட மனசாட்சி




கதிரவனை படைத்து
காலையில் எழவைத்து
கதிர் வீச்சால் முகம் காட்டி
கடமை தவறாமல்
நேர்மையோடு அவனை
செயல்பட வைத்து
வாழ்கின்ற மக்களுக்கு
வழிகாட்டியது இயற்கை

படிக்காத மாணவனை
பிரம்பால் அடித்து அவன்
குடும்பம் மேன்மையுற
உதவும் ஆசிரியர் போல,
கருத்த மேகத்தை அடித்து
குரலெழுப்பி ஓலமிட்டு
கண்ணீர்விட வைத்துஉயிர்களைக்
காப்பதும் ஆதவன் தானே!

வெள்ளை நிறத்தழகியை
வீதியில் உலாவரச்செய்து
அன்பும், காதலும் தந்து
இதயத்தைக் குளிரச்செய்ததும்,
பச்சிளம் குழந்தையின்
பசிபோக்க துணை நிற்கும்
நிலாப் பெண்ணை படைத்ததும்
இயற்கை தானே!

ஆணும், பெண்ணும் உழைக்க
அன்றே வழிகாட்டியதும்
இயற்கை தானே,
பகலில் உழைத்த ஆதவன்
படுத்துறங்கும் இரவில்
நிலாப்பெண்  பொறுப்பேற்க
நிம்மதி கொள்வாள்
இயற்கை அன்னை

இயற்கை அன்னை
இத்தனையும் கற்று தந்தும்
மக்களின் துயர் போக்க
மனமில்லையே சிலருக்கு,
தான் வாழ்ந்தால் போதுமென்று
தரம் தாழ்ந்தால்
உன்னை அழிக்காதா
உன்னோட மனசாட்சி?



சனி, 8 செப்டம்பர், 2018

அவமானப்பட்டான்


கேள்வி எதுவானாலும்
கேட்டதும் சட்டென்றுபதில்
கூறும் ஒரு பெரியவர்,
அவரை அவமானப்படுத்த
ஒரு அரைவேக்காடு முயல

ஒரு நாள்
ஒரு சிட்டுக்குருவியைத் தன்
உள்ளங்கைக்குள்
மூடி வைத்துக் கொண்டு
பெரியவரிடம் வந்தான்

இந்தக் குருவி உயிரோடு
இருக்கிறதா?
இல்லை செத்துவிட்டதா?
கூறுங்கள் பெரியவரே எனக்
கேட்டான்

உயிர் இருக்கு என்றால்
உள்ளங்கையில் வைத்தே
கொன்று விடுவான்,
இறந்து விட்டதென்றால்
கையை விரித்து பறக்க விடுவான்

என்பதை உணர்ந்த
பெரியவர் சொன்னார்
அது உன் கையில் தான்
இருக்கிறது என்றார்
அரைவேக்காடு தான்இப்ப
அவமானப்பட்டான்