வியாழன், 27 மார்ச், 2014

கருகி சாயுதடி.


குங்குமப் பொட்டும்

வட்ட நிலவும்

வகிடெடுத்த கார்குழலும்

நெத்தி இளம்பிறையும் கூடி

தங்கச் சிலையென

நெஞ்சில் நிறைந்தவளே!

 

வீட்டின் தரம் உயர

என் கரம் பிடித்துத்

தாரமென தடம் பதித்தவளே!

குடும்பத்தின் தர்மம்

தளைக்க வேண்டி

தாயும் ஆனவளே!

 

உசந்து நிக்கும் புளியமரம்

உலுக்கிவிட்டால் கலகலக்கும்

அதுபோல வீட்டில்

நீ பேசி சிரிச்சிருந்தால்

வீடே மகிழ்ந்திருக்கும்

 

வாழ்வெனும் பூஞ்சோலை

வந்த இளந்தென்றலே,

நீரில்லா ஆறுகளில்

நீர் பெருகி ஓடிவந்து

மண்ணெல்லாம் பொன்னாக்கி

வளம் கொழிக்க வைத்தவளே!

 

காலவெளி ஆனதிலே

காலமாகிப் போனவளே,

போன இடம் தெரிந்திருந்தும்

போகவழி தெரியாமல்

வாடுறேனே உன் நினைவா.

 

வாழுகின்ற மண்மீது

உன்னோட வண்ணமுகம்

காணாமல்

பச்சிளம் பயிருபோல

என்னோட உயிரு-நித்தம்

கருகி சாயுதடி.

அதைவிட அதிகமல்லவா!


இறைவனைத் தேடி

ஆலயம் சென்றோம்,

நீயோ

பக்தனைத் தேடி

பாட்டைக்கு வந்தாய்.

 

அருள் வேண்டி

ஆண்டவனுக்கு

பூமாலை சூட்டினோம்,

நீயோ

வரம் வேண்டி

இரு கரம் கூப்பி

புன்னகை சூட்டுகிறாய்.

 

பரந்தாமன்

பங்குனித் திருவிழாவில்

பவனி வருவான்

ஒருமுறையாவது,

நீயோ

மூலவனைப்போல்

ஆலயத்தை விட்டு

வெளியில்

வருவதேயில்லை.

 

மதங்கள் வேறுபட்டாலும்

இறைவன் ஒன்றென

தெய்வங்கள் ஏற்கும்,

நீயோ

மதவாதத்தை ஏற்க

மறுப்பதாய்- நாளும்

மறையென ஓதிடுவாய்.

 

என்றாலும் உன்

சாதி சனத்துக்கு

இடம் ஒதுக்கக்கோரி

கேட்டு வாங்கிடுவாய்.

 

வழிபடும் இறைவனுக்கு

வகுத்த உருவங்கள்

எத்தனையெத்தனை!

வழிகாட்ட வருகின்ற

மாயரூபனுக்கு

அதைவிட அதிகமல்லவா!

 

புதன், 19 மார்ச், 2014

வேறுபட்டு நிற்பதேனோ?


நாட்களென

அழைத்தபோது

புதனும் வியாழனும்

அருகருகில் இருந்தாலும்

கிரகமென ஆனபோது

மலைக்கும் மடுவுக்கும்

உள்ள நிலைபோல

 

மனிதனென

வாழும்போது

கூடி வாழ்ந்தாலும்

அரசியலில் கால் பதித்து

பேரெடுத்த போது

வேற்றுக் கிரக

மனிதனைப் போல்

வேறுபட்டு நிற்பதேனோ?

 

அழியாத நினைவுகள்.


அறுபதைக் கடந்த பெரிசு

அழியாத நினைவுகளால்

குட்டி போட்ட பூனை போல

சுற்றி சுற்றி நடந்து வந்து

 

சொல்லாமல் தடுமாறும்

சோகத்தில் முகம் வாடும்

அவள் தடம் பதித்த இடம் தேடி

அலை பாயும் நெஞ்சம்

 

ஏங்கித் தவிக்கும் மனம்

இல்லையென்று உணரும்போது

தலையை ஆட்டிவிட்டு

கண்ணீரைத் துடைத்துக்கொள்ள

 

பார்த்த மருமகளோ பரிதவிப்புடன்

என்ன மாமா வேண்டுமென்றாள்?

எப்படி சொல்லும் பெரிசு- இறந்த

உன் அத்தையின் நினைவென்று.

 

தாமரை நெஞ்சோடு.


அயோத்தியின்

இளமங்கையர்

தாமரைக் கண்ணால்

இராமனை

நோக்கியது போல்

 

பெரு மழையில்

நிரம்பிய அணைகளை

கர்நாடகம்

தாம்+அரை நெஞ்சோடு

திறந்து விட்டதில்

 

வந்தடைந்தாள்

காவிரி அன்னை

தமிழக மண்ணுக்கு

மக்களின்

துயர் துடைக்க.

 

கண்ணீர் மட்டும் தான்.


அழாத விழியும்

உழாத வயலும்

மனித வாழ்வில்

வளம் காணாது.

 

விழுந்தும், நடந்தும்

கடலில் கலக்கும்

அனைத்து நீரையும்

கண்கள் தேடும்.

 

திரண்டு, உருண்டு

விழியில் வழியும்

கண்ணீர் மட்டும்

கண்களைத் தேடும்.

 

இதய சுமையை

இறக்கி வைத்து

ஆறுதல் தருவது

கண்ணீர் மட்டும் தான்.

நல்லவன் யாருண்டு?


எங்க

ஊரு திருவிழாவில்

ஊர் கூடி மகிழும்.

கங்கை ஓடும்

காசியிலோ

நாள்தோறும்

திருவிழா.

 

புண்ணிய காசியிலோ

பல்லி சொல்லாது

பூவு மணக்காது

பிணவாடை இருக்காது

மாடு முட்டாது

கழுகு பறக்காது

அத்தனையும் உண்மை

 

புனிதக் கங்கையிலோ

விடப்படும் பிணம்

வீசப்படும் பூமாலை

கரைக்கப்படும் அஸ்தி

கலையப்படும் பாவம்

கொட்டப்படும் பிரசாதம்

அத்தனையும் சுமந்து

மாசற்ற புனித நீராய்

காட்சி தரும் கங்கை.

 

பூலோக மாந்தரோ

காசியில கால் பதித்து

கங்கையில நீராடி

கடவுளை வழிபட்டு

பாவத்தைத் தொலைத்து

புண்ணியம் பெற்றாலும்

வாழும் மாந்தரில்

நல்லவன் யாருண்டு?.

செவ்வாய், 18 மார்ச், 2014

யாருக்கு உரிமையுண்டு?


கை வைக்கும் களவும்

கை நீட்டி வாங்கும் இலஞ்சமும்

ஓட்டுக்கு வாங்கும் பணமும்

எல்லாமே திருட்டு தான்

யார் யாரை பிடிப்பது?

 

தலைமுறை தலைமுறையாய்

இரட்டை வேடம் போடுவது

நடைமுறையாகிவிட்டபோது

குறையென்று கூறுவதற்கு

யாருக்கு உரிமையுண்டு?

 

நோயின் வேதனையால்

சீக்கிரம் போவதற்கு

எமனுக்கும் இலஞ்சம்

கொடுக்கும் காலம்

வந்தாலும் ஆச்சரியமில்லை.

வெள்ளி, 14 மார்ச், 2014

முடி.


காட்டில்  வாழும்

கவரி மானுக்கும்

வீட்டில் வாழும்

பெண் மானின்

சவரி முடிக்கும்

சம்மந்தமுண்டு.

 

விழுந்தால்

உயிரை விடும்

கவரி மான்

விழாதிருந்தாலோ

பிறக்காது

சவரி முடி.