வெள்ளி, 14 மார்ச், 2014

கூடி அழுகின்றதோ!


உயர்ந்த மரங்களின்

உச்சிமேல்

படர்ந்து கிடக்கும்

மேகக்கூட்டம்

அடித்து, புரண்டு

அலறி அழுது

கோபக் கனலோடு

இறங்கி வந்ததில்

கருகி மடியும்

சில மரங்கள்.

 

பருவ காற்றென

பெயர்வைத்து வந்ததால்

ஓடிவிட எண்ணி

அடித்த வேகத்தில்

உருமாறி

மரணப் புயலென

வீசியதில்

சாய்ந்து அழியும்

சில மரங்கள்.

 

நிழல் தேடி

வந்தமர்ந்து-பின்

விழிமூடி உறங்கி

எழுந்த மனிதன்

வீடு செல்லுமுன்

விறகுக்கு

நாளும் வெட்டியதில்

அனு அனுவாய்

உயிரை விடும்

சில மரங்கள்.

 

உணவும் இடமும்

காலமெல்லாம்  தந்து

காத்திருந்த

மரங்களெல்லாம்

மடியும் வேதனையில்

அந்தி பொழுதுகளில்

வந்தடையும்

பறவையெல்லாம்

ஒப்பாரி வைத்து

கூடி அழுகின்றதோ!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக