வியாழன், 27 மார்ச், 2014

கருகி சாயுதடி.


குங்குமப் பொட்டும்

வட்ட நிலவும்

வகிடெடுத்த கார்குழலும்

நெத்தி இளம்பிறையும் கூடி

தங்கச் சிலையென

நெஞ்சில் நிறைந்தவளே!

 

வீட்டின் தரம் உயர

என் கரம் பிடித்துத்

தாரமென தடம் பதித்தவளே!

குடும்பத்தின் தர்மம்

தளைக்க வேண்டி

தாயும் ஆனவளே!

 

உசந்து நிக்கும் புளியமரம்

உலுக்கிவிட்டால் கலகலக்கும்

அதுபோல வீட்டில்

நீ பேசி சிரிச்சிருந்தால்

வீடே மகிழ்ந்திருக்கும்

 

வாழ்வெனும் பூஞ்சோலை

வந்த இளந்தென்றலே,

நீரில்லா ஆறுகளில்

நீர் பெருகி ஓடிவந்து

மண்ணெல்லாம் பொன்னாக்கி

வளம் கொழிக்க வைத்தவளே!

 

காலவெளி ஆனதிலே

காலமாகிப் போனவளே,

போன இடம் தெரிந்திருந்தும்

போகவழி தெரியாமல்

வாடுறேனே உன் நினைவா.

 

வாழுகின்ற மண்மீது

உன்னோட வண்ணமுகம்

காணாமல்

பச்சிளம் பயிருபோல

என்னோட உயிரு-நித்தம்

கருகி சாயுதடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக