வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

தெய்வத்தின் உயிர்கள்



வேறு வேறு நாட்டில்
தோன்றிய மதங்கள்
வேறுபட்ட வழிபாட்டால்
வெவ்வேறு மதங்களென
இந்து, கிறிஸ்துவம், முஸ்லீம்,
புத்த மதமென உருவானது

ஒன்று படாத மனங்கள்
ஒட்டாமல் போனது,
இறைவன் ஒன்று தான்
அவனிடம் செல்ல
வழிகள் தான் வெவ்வேறென
உணர்ந்தாலும்,
எல்லோரும் ஏற்காதபோது

சாமி இருக்கும் கோவிலையும்,
சர்ச்சையும், மசூதியையும்
ஒன்றுபோல எண்ணி
அடைக்கலம் பெற்று
உயிர் வாழும் அமைதிப் புறாக்கள்
வணங்கித் தொழவேண்டிய
தெய்வத்தின் உயிர்கள்


புதன், 21 பிப்ரவரி, 2018

அருகில் கொண்டுவரும்




மண்ணில் தோன்றிய
மானுடம், உயிர் வாழ
உணவைத் தேடியது
உழைப்பு வழிகாட்டியது
உயிரும், உழைப்பும்
உடன் பிறப்பானது

உழைப்பு உணவு தந்தது
உணவு உயிரைக் காத்தது,
உழைப்பு சிந்திய
வியர்வைத் துளிகள்
தலையெழுத்தை மாற்றி
தரணி போற்ற வைத்தது

சிரத்தையுடன் உழைத்து
சிகரம் தொட்டவர்களின்
சாதனைகளை
சரித்திரம் பறை சாற்றியது
உழைக்கும் கரங்களால் தான்--புவி
புதுப் பொலிவு பெறுகிறது

உழைப்பின் ஆற்றல்
உள்ளத்தை மகிழ்விக்கும்
செல்வத்தை பெருக்கும்
தேகத்தைத் திடமாக்கும்
அறிவுக்கு எட்டாததையும்
அருகில் கொண்டுவரும்




ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

கொட்டுகிறது பணத்தை



மாதா,பிதா,குரு, தெய்வமென
முன்னோர்கள் அன்று
கற்று கொடுத்தார்கள்,
கற்ற மனிதன், மனிதனை
மதித்து வாழ்ந்தான்
மனிதனும் தெய்வமானான்

கால ஓட்டத்தில்
கலிகாலம் உருமாறியது—இன்று
கற்று தரும் கல்வியோ
பணம், பட்டம், பதவி தான்
உயிர்வாழ தேவையென்றது
உணர்ந்தது பட்டறிவும்

பணத்துக்கு அலையும் பதவியாளர்
பார்வை தன்னலமானதால்
பலனின்றி தடுமாறும்
பாமர மக்கள் படும்பாடு
புண்ணில் வேல்
பாய்ச்சிய கதை போலானது

காந்தியின் படம் அன்று
கைகொடுத்தது ஓட்டு கேட்க,
காந்தியின் பணநோட்டு இன்று
கறைபட்டது அரசியலால்,
கொடிகட்டி பறக்கும் ஊழல்
கொட்டுகிறது பணத்தை


வியாழன், 15 பிப்ரவரி, 2018

நாம குறை கூறலாமோ?



ஈசனின் ஆலயத்தை
எழுப்புவதுபோல
ஈன்றெடுத்த சிசுவின்
வளர்ப்பும்,
கருவறை வாசம்
இருவருக்குமுண்டு—அதனால்
இருவரும் இறைவன் தான்

மானுடத்தை
படைத்தது ஒருவன்—அதில்
பிறந்தது ஒருவன்,
மனிதகுலத் தொடக்கம்
முறையாக அமைந்தால்
மானுடம் சிறக்கும்
மனிதநேயம் தழைக்கும்

நடக்க முயற்சிக்கும் பிள்ளைக்கு
நம் முன்னோர்கள் சொன்னதை
ஆரம்பமாய்க் கற்று கொடு
அன்னையும், பிதாவும்
முன்னறி தெய்வமென்றும்,
அன்பினால் அகிலத்தையே
ஆளலாமென்றும்

பார்த்து வளர்க்காம—அன்பும்,
பாசமும் இழக்கும் பிள்ளை,
வாழையடி வாழையாய்
வாழ எண்ணாம
நாளை பெற்றோரை
நடுத்தெருவில் விடும்போது

நாம குறை கூறலாமோ?

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

மரங்களல்ல, மனிதர்கள் தான்.



நன்றிக்கடன் பட்டதுபோல்
நன்மைகள் பல செய்திடும்,
நீர் விட்டு வளர்த்த
நில மாந்தரை நேசிக்கும்,
தன்னைக் காக்கும் மண்ணை
தன் வேரால் காத்தருளும்

வாழும் உயிர்களுக்கு நிழல் தந்து
வெப்பம் தணிக்கும்,
கனியும், இலையும் கொடுத்து
கனிவோடு பசிபோக்கும்,
உருமாறும் தன் உறுப்புகளால்
உதவிக்கரம் நீட்டும் மாந்தர்க்கு

மண்ணில் வாழ் உயிர்களுக்கு
மழை நீரை பெற்று தரும்,
மூச்சிழுத்து, மூச்சு விடும் மரம்
மனித சுவாசத்தை மேம்படுத்தும்,
மானுட நன்மைக்கு தன்னை
முழுமையாய் அர்ப்பணித்திருந்தும்

மரத்தின் அரிய பண்பு
மனிதனிடம் இல்லையே!,
நன்றி மறந்த மனிதன்
நயவஞ்சகமா மரங்களை
வெட்டி சாய்ப்பதால்
வேதனையில் வாடப்போவது

மரங்களல்ல, மனிதர்கள் தான்

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

உயர் ஆசான்



முடித்துவிட எண்ணி
முழுமையாய் முயற்சித்தும்
முடங்கிபோன காரணத்தை
பட்டு அறிந்து
போக்க உதவுவது அனுபவம்—இது
குரு இல்லாக் கல்விக்கூடம்
குன்றின் மேலிட்ட விளக்கு

உலகை புத்தகத்தில் படிப்பது
உயர்வு தரும் அறிவுக்கு,
உலகையே புத்தகமாக படிப்பது
அனுபவத்தை வளர்க்கும்,
அறிவைவிட விசாலமான அனுபவம்
முதியோர்க்கு துணை நிற்கும்,
மரியாதை சேர்க்கும்

பலமுறை முயன்றும்
பலனின்றி தோற்றாலும்
கவலை வேண்டாம்,
கூடும் அனுபவம்
காலமுழுதும் கைகொடுக்கும்,
அனுபவமில்லா படிப்பை விட
படிப்பில்லா அனுபவம் மேலானது

வயது கூட கூட மரத்துக்கு
வைரம் பாய்வது போல்
வயது ஏற ஏற மாந்தர்க்கு
வைரம்போல அனுபவம்
வந்து கூடும்,
வாழ்க்கைக் கல்விக்கு
உயர் ஆசான் அனுபவமே!


வியாழன், 8 பிப்ரவரி, 2018

பழியெனத் தோனலையோ?



நிலத்தில் காணும்
நெற்கதிரைக் கண்டு
நெல் மூட்டையைக்
கணக்கிடுகிறார்
கல்வி கற்காத விவசாயி

கைகளால்
நகையைத் தூக்கி பார்த்து
எத்தனை பவுனென்று
எடுத்து கூறும் பத்தரின்
அனுபவம் சரியாக உள்ளது

வானத்தை பார்த்து
வரையறுக்கும் மீனவர்
வீசும் புயற்காற்றை
முன்னதாக அறிந்து
முடிவெடுக்கிறார் பயணத்தை

அனுபவச் செயல்களின்
அத்தனை கணிப்புகளும்
ஆச்சரியம் தருகின்றன
சரியாக இருப்பதால்—திறமை
சரித்திரம் படைக்கிறது

ஆனால்
படித்த மாந்தரில் பலர்
பணத்துக்கு ஆசைபட்டு—திறமையை
பலி கொடுக்கும்போது
பாழ்படுகிறதே மக்கள் வாழ்வு

பழியெனத் தோனலையோ!

திங்கள், 5 பிப்ரவரி, 2018

வேறுவழி தெரியல!



ஈராயிரத்து ஐநூறு
ஆண்டுகளுக்கு முன்பு 
வாழ்ந்த சீனத்து தத்துவ அறிஞர்
லாவோட்சு சொன்னது

ஆட்சி புரிபவனும்
ஆள்பலம் கொண்டவனும்
உயர் பதவி வகிப்பவனும்
உச்ச செல்வாக்கு பெற்றவனும்

காற்றுள்ளபோதே
தூற்றிக் கொள்வதுபோல்
காலம், காலமாய்
தவறுகள் செய்தார்கள்—இன்றும்
தொடர்கிறது

உன் நாட்டில் மட்டுமல்ல
உலகெங்கும் இப்படி தான்
நாளும் நடப்பதால்
நாம் கவலைபட்டு என்ன பயன்?

மனக்கவலை தீராதபோது
மறக்காமல் வேதனை படு
மனிதனாக பிறப்பெடுத்து
மண்ணில் வாழ்வதற்கு

அறத்தைவிட
சிறந்த ஆக்கம் ஏதுமில்லை
அறத்தைத் துறந்தால்
அழியும் இபூவுலகம்

இறைவன் என்பதும்
இல்லாதவனோ?—மனமும்
ஒரு வெற்றிடந்தானோ?
வேறுவழி தெரியல!