ஞாயிறு, 29 மே, 2016

மாந்தருக்கு விளங்கலையே!



தவறான பாதையில்
தான் சேர்த்த பணத்தால்
தானதர்மம் செய்வதுபோல்,
வானம் களவாடி எடுத்த நீரை
புவிக்கு நன்கொடையாய்
வாரி வழங்கி பேரெடுக்கிறது

மற்றவர் ஒதுங்கி நின்று
மழையை இரசித்திருக்க,
அநாதை சிறுவன் மட்டும்
அம்மழையில் விளையாட
பெரியவர் கேட்டார்—மழையில்
ஏன் நனைகிறாய் என்றார்

நான் மழைக்கு
நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்,
அதுமட்டும் தான் என்னை
அன்று முதல் இன்று வரை
தொட்டு பேசி விளையாடுமென்று
சொல்லி மகிழ்ந்தான் சிறுவன்

சாதி, மதம், இனமென பிரித்து
சாதிக்க நினைத்த அறிவுக்கு
எல்லோரும் உடன்பிறப்பென்று
எண்ணத்தெரியலையோ!—உலகில்
மனிதர்களை வேறுபடுத்தி
மனிதத்தை அழித்தது முறையோ!

அனைவரும் நலமாய் வாழ
அவனியில் பெய்யும் மழை
சாதி,மதம் பார்ப்பதில்லை,
எல்லோரும்  பயனடைய
இயற்கை தந்த வரமென
உணர்த்துவது மழை

மழைத்துளிகள் என்றுமே
மண்ணில் தனித்திருப்பதில்லை
துளிகள், நதியாகிக் கடலாகி
உலகில் ஒற்றுமையை பறைசாற்றும்
மழை அறிந்த மனிதம்கூட
மாந்தருக்கு விளங்கலையே!


ஞாயிறு, 22 மே, 2016

கொடுமையிலும் கொடுமை.



கடமையென எண்ணி
கை கொடுத்து உதவி
உயர்த்தி கரை சேர்த்து
உச்சம் தொடவைத்து
வெற்றி கண்டவர்- முடிவில்
தோற்று போனதுபோல்
துயரத்தில் மூழ்கினார்

சொகுசு வாழ்க்கைக்கு
சொர்க்கலோகம் போக எண்ணி
சிறகு விரித்த குஞ்சு
சொந்தத்தை உதறிவிட்டு—பெற்றோரை
சோகம் சுமக்கவைத்து
சுடுகாட்டில் விட்டுபோனால்
சொல்லி அழ வார்த்தையேது!

அந்திம காலத்தில்
வந்தமர்ந்து வாழுமிடம்,
சொந்தத்தையும், நட்பையும்
மொத்தமா தொலைத்துவிட்டு
பொழுதை தள்ளும்
உணர்வற்ற ஜடங்களாய்
உயிர்வாழும் முதியோர் இல்லத்தில்

காண வருவோரிடம்
குறையொன்றுமில்லை
மகிழ்வோடு வாழ்வதாய்
மனதார சொன்னாலும்
துடிக்கும் உதடுகளும்
கண்களில் திரளும் கண்ணீரும்
காட்டிக்கொடுத்துவிடும்

சாப்பாட்டு மணியடிக்க
சமையல்கூடம் போக
தட்டைக் கழுவியெடுத்து
தட்டுத் தடுமாறி வரிசையில் நிற்கும்
பெற்றோரைக் காணும்
எந்த பிள்ளையானாலும்—பரிதவிக்கும்
பாவம் செய்ததுபோல்

வாழ வழிகாட்டி
உயர்த்திவிட்ட பெற்றோரை
பேணி காக்காமல்
பிள்ளைகளின் புறக்கணிப்பால்
தனக்குதானே தண்டனைக்
கொடுத்துக் கொண்டு வாழ்வது
கொடுமையிலும் கொடுமை.


செவ்வாய், 17 மே, 2016

கொடுத்தனுப்ப.


கண்ணான கணவன்
கண்மூடி போனபின்னே
கால்வயிற்று கஞ்சிக்குக்
கதியற்று நின்றபோது
கண்ணீர்விட்ட கதை

பெத்தபிள்ளை இருக்கையிலே
பாசத்தை காட்டலையே
விளக்கேத்த வந்த பொண்ணு
வீதிக்கு விரட்டியபோது
வயிறு பத்தியெரிந்த கதை

குடிமுழுகி போனதுபோல்
கலங்கும் நெஞ்சமதில்
கவலையெல்லாம் குடியமர
வயிற்று பசியாலே
வாழ்விழக்க துணிந்த கதை

பரமன் வாழவழி காட்டினால்
பசியை விரட்டிவிடலாம்,
பசி ஜெய்ச்சுதுன்னா
பிராணனை விட்டுவிடலாமென
வைராக்கியம் எழுந்த கதை

வழிபட்ட இறைவன் வழிகாட்ட,
வருவோர், போவோர்
வந்து இளைப்பாறும்
வேப்பமர நிழலில்
கேப்பங்கூழ் வியாபாரம்

தினந்தோறும்
தனியொரு மனுஷியாய்
தள்ளாத வயதிலும் பாடுபட்டு
தன்னையே காக்கும் பாட்டிக்கு
வயது அறுபத்தாறு

பேரப்பிள்ளையின்
பிறந்தநாள் நினைவுக்கு வர
புதுசட்டை எடுத்து
காத்திருக்கிறாள்
கூப்பிடாத வீட்டுக்குக்

கொடுத்தனுப்ப.

புதன், 11 மே, 2016

தொடவும் முடியாது.



வானத்து அரசனுக்கு
வண்ண மலர்களால் வாகை மாலையா?,
வருணனை வரவேற்க
வானவெளி தோரணமா?—இல்லை

ஆதியின் துணையோடு
ஆழி, நதி நீரை
அபகரித்த மேகத்தால்
ஆகாசம் வந்த நீர்த்துளிகள்

தாயின் நினைவால்—மழையாய்
தாயகம் திரும்பியதில்
வானதேவதையின்
வண்ணசேலை நனைந்ததோ!

ஈரமான சேலையின்
நீரை போக்க
வானவெளியில்
உலர வைக்கிறாளோ!

சேலை நீளமானதால்
சேரி பெண்போல—அவள்
பாதியை உடலில் சுற்றி
மீதியை காய வைக்கிறாளோ!

வானதேவதையின் வடிவழகை
ஆதவன் அருகில் காணாதவாறு
எப்போதும் அவள்
எதிர் திசையில் தோன்றுகிறாளோ!

இரவில் அவள் வந்தால்
வெள்ளை சேலையில்
தோன்றுவாள்—மறையும்
தெளிவற்று பிறவண்ணங்கள்

வண்ண புடவையுடுத்தி
வரும் வாணதேவதை
ஒரு கற்புக்கரசி—அவளை

நெருங்கவும், தொடவும் முடியாது 

வெள்ளி, 6 மே, 2016

மகுடம் சூடலாமோ!

வழி தவறா வாழ்க்கைக்கு
வடிவமைத்த சட்டங்கள்
புனிதமானது,
படைத்தவனேயானாலும்
மதித்து நடப்பது—நேர்மை
மரணப்படாதிருக்கவேண்டி

சட்டமெனும் சட்டையை
போட்ட பாம்பை பார்த்ததில்லை
கழற்றி போட்டதை
கண்ட சுயநலவாதிகள்—சட்டையை
களைந்து வீசினரோ!

பிறந்தநாள் விழாபோல
வாழும் சனநாயகத்துக்கு
உற்றார், உறவினர் சூழ
அய்ந்தாண்டுக்கு ஒருமுறை
அரங்கேறும் வைபவம்

மனிதனை தெய்வமாக்க
மக்கள் நடத்தும் வேள்வி,
மனிதனாயிருக்கும் வரை
மக்கள் வணங்கப்படுவர் வேள்விக்காக
தெய்வமானபின்—கரிசனமும்,
தரிசனமும் இல்லாமல் போகும்

வாக்குறுதிகள்—அழியாத
வரலாற்று பொக்கிஷங்கள்
அடுத்தடுத்த தேர்தலிலும்
அயராது வந்து
முகம் காட்டி மகிழும்
மாற்றம் ஏதுமின்றி

தூண்டிலில் வைக்கும் உணவுக்கு
தூண்டப்படும் மீன்
உயிரை இழப்பதுபோல்
வாக்கு வியாபாரப் பொருளானால்
வறுமையில் வாடும் ஏழைகளின்
வாழ்க்கை உயருமா?

காலம், காலமாய்
குடிநீருக்கு தவிக்கும் மக்களின்
இன்னலைப்போக்காமல்—நவீன
இலவசங்களில்
மக்களை மயங்கவைத்து
மகுடம் சூடலாமோ?