சனி, 28 டிசம்பர், 2019

கறுப்பானானோ!




ஊரு நாட்டாமை போல
பேரு பெற்றவரு,
மக்களை பயத்தாலேயே
மண்டி போட வைப்பவரு,
பழி, பாவங்களுக்கு அஞ்சாதவரு,
பழியை அடுத்தவர் மீது சுமத்தி
தப்பிக்கும் கலையில்
தலை சிறந்த பெரியவரு

அடுத்தவர்களின் உயர் சொத்தை
அபகரிக்க எண்ணி—அதிலும்
தன் தலை உருளாமல்
தப்பிக்க நினைத்த தர்மராஜா
உருவாக்கிய பினாமி தான்
சுனாமியெனும்பேரலை
பறித்த உயிர்கள் பல ஆயிரங்கள்
பெருமகனார் அறியாததா 1

இருள் கூடும்
அமாவாசை தினத்தன்று
இறந்த முன்னோர்களை
நினைத்து வழிபடும்
சந்ததிகளின் துயரை
சந்திரன் காணபொறுக்காமல்—தன்
கரங்களால் முகத்தை மறைத்து
கறுத்து போனதுபோல்

சுனாமியின் கோரத்தால்
உயிரிழந்த மக்களின்
பதினைந்தாம் ஆண்டின்
நினைவு நாளான 26-12-2019 ல்
பிரார்த்தித்தவர்களின் துயர் கண்டு
கலங்கிய சூரியனும்—தனது
கைகளால் முகத்தை மறைத்து
கறுப்பானானோ !




செவ்வாய், 24 டிசம்பர், 2019

நாதியற்று போனார்கள்


எதுவும்  படிக்காத  பறவைகள்
எதிர் காலத்தை சரியாகக்
கணிக்கின்றன,
கடவுள் அளித்த நுண்ணறிவை
பட்டறிவாய் பயன்படுத்துவதால்
பறவைகளின் செயல்கள்
பிரமிக்க வைக்கின்றன

அனைத்தும் கற்ற மனிதனோ
அறிவை அடுத்தவருக்கு
விற்றுக்கொண்டிருப்பதும்,
ஊழல்களால் பணம் ஈட்டுவதும்
வாடிக்கையானதால்
நற்பண்பையும், நேர்மையையும் இழந்து
நாட்டு மக்கள் நாதியற்று போனார்கள்




எப்படிக் காண்பது




ஊராட்சி மன்ற தேர்தலில்
விலை போகும் பதவிகள்
பல லட்சங்கள் கொடுத்து
பதவியை பெற நினைப்பது
கொள்கைக்காகவாஇல்லை
கோடிகளுக்காகவா ?

மனித சேவைக்காக
முன்பு உருவான சட்டத்தை
மதிக்காமல்
மனித நேயத்தையும் மறந்து
மாற்று வழிபணத்திற்கு
மனதை அலைய விடலாமா?

தேர்தலில் வெற்றி பெற
தேர்ந்தெடுத்த நடைமுறை
தொகுதி மக்களுக்குக்
கொடுக்கும் பணம்
வாக்கு சீட்டாக மாறி
வாகை சூடிய பின்

மக்கள் நலனை பாராமல்
மக்கள் பணிகளில்
மறைமுகமாக பெறுவதை
முறையிட்டால்
தலையே சொல்கிறது
தேர்தலில் செலவிட்டதை
ஏப்படிக் காண்பது?

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

அதைக் கெடுக்கலாமா?




சூரியனும், அதனை
சுற்றி வரும் கிரகங்களும்
புவி வாழ் மக்களுக்கு
பாகுபாடு ஏதுமின்றி
பலன் தந்து காப்பது
பண்பாடா ? கருணையா ?—இல்லை
உலக மக்களெல்லாம்
ஒரு குலமென உணர்த்தவா ?

வயிற்று பசி போக்கி
வாழ்வளித்தவனை
உளமாற நினைத்து
வணங்கி வழிபட- மாந்தர்
அவரவர்  அறிந்த பெயரில்
அழைத்து மகிழ்ந்தார்கள்—இறைவன்
மக்கள் மனதில் அமர்ந்தான்
மதங்கள் தோன்றின

இறைவன் ஒருவனே
ஒரு பெண்ணான
அன்னையைப்போல--அவள்
அவளது தந்தைக்கு மகள்
கூடப்பிறந்தோர்க்கு சகோதரி
கணவனுக்கு மனைவி
பெற்ற பிள்ளகளுக்கு தாயென
பல அவதாரங்கள் அவளுக்குண்டு

அதுபோல் தான் இறைவனும்
ஆசையோடுஅழைத்தவர்களுக்காக
அவதாரங்கள் பல எடுத்தார்
தாங்கள் உண்பதைத்
தெய்வத்திற்கும் படைத்து
அன்பை வெளிகாட்டினர்- மக்கள்
ஒன்றே குலம், ஒருவனே
தேவனென ஏற்றுக்கொண்டார்கள்

வெவ்வேறு மதங்கள்
வேர்விட்ட போதும்--எதுவும்
 உயர்ந்ததுமல்ல,தாழ்ந்ததுமல்ல,
மண்ணில் இன்னமும்
மனிதக் குழந்தைகள் பிறப்பது
இறைவன் மனிதர்கள் மீது
வைத்திருக்கும் நம்பிக்கை தானே!
அதைக் கெடுக்கலாமா ?





சனி, 23 நவம்பர், 2019

இருந்துவிடக்கூடாது




மக்களின் முன்னேற்றத்தை
முடமாக்குவது
மதமும், அரசியலும் தான்,
மத நம்பிக்கை, அரசியல் இரண்டும்
மக்களை ஆட்கொள்வதால்
மக்களிடையே மனக்கசப்பு
இருவேறு பாதை
இரண்டும் பகையோடு என்றும்

பொது இடங்களை ஆக்கிரமிக்க
கொடி நட்டு வைப்பதும்,
கட்டிடம் ஒன்றை கட்டி
மக்களை வழிபட வைத்துபின்
அபகரிப்பதும் எளிதல்லவா !
மக்களுக்கு வழிகாட்டலாமா
இல்லாத ஏழைகளும்
இப்படி செய்தால் ஏற்புடையதா?

மனிதனுக்கு வேண்டாததல்ல
மதமும், அரசியலும்
ஆக்கிரமிப்புகளுக்கும்,
பண்பாட்டு நெறிக்கும்
எதிராக இருந்து , நாட்டு நலனுக்கும்,
தேச முன்னேற்றத்திற்கும்
தடைகளாய் நீங்கள்
இருந்துவிடக்கூடாது


தெருவில் நிற்கும்




ஊர் மக்களெல்லாம்
ஒன்று கூடி இழுக்கும்
தேர்த்திருவிழா,
ஆண்டவனுக்கு முன்னால்
அனைவரும் சமமென
ஆர்ப்பரிக்கும் நந்நாள்

பகைமை மறந்து
ஈகை குணத்தோடு
இறைவனை அழைத்து செல்ல
ஒற்றுமையாய்
வடம் பிடிக்கும் கைகள்
வரலாறு படைக்கும்போது

சாதிக் கலவரமும்
சாதிக்க வந்ததுபோல்
சங்கு ஊத,
தீவிரவாதம் வழிகாட்டும்
சனங்கள் செத்து மடியும்
சாமி தெருவில் நிற்கும்


சனி, 16 நவம்பர், 2019

நாம் எட்டமுடியும்




உயர் பண்பு , நந்நடத்தை
ஒருவரை உயரச்செய்யும்
மரியாதை தந்து மகுடம் சூட்டும்
மக்கள் மனத்தில் அமரச் செய்யும்,
அவமானம் அப்படியல்ல

ஒருமுறை அவமானப்பட்டால்
ஆயுள் உள்ளவரை
அகலாது மனதை விட்டு,
மற்றவர்களிடமிருந்து
மரியாதையும் கிடைக்காது

அகங்காரம் தலைக்கேறினால்
அவமானம் அடிமனத்தில் அமரும்,
பிறர் அவமானப் படுத்தினால்
பொறுமையாக இரு
பெறுபவர் ஏற்காதபோது
அவரிடமே போய் சேரும்

உயர் பதவி
வகிப்பவர்களிடமிருந்து
நாடு எதிர்பார்ப்பது
நல்ல பண்பாட்டையும்,
உயர் கண்ணியத்தையும் தான்

தடம் புரளும்போது
தன் மானம் குறையும்
தேசத்திற்கும், மனித குலத்திற்கும்
இழிவைத் தந்து
அவமானப்பட வைக்கும்

அவமானங்களையும்
அவமரியாதைகளையும் கண்டு
அஞ்சாமல் ,தாங்கிக்கொண்டால்
நமது இலக்குகளை
நாம் எட்டமுடியும்

போராட வைக்கிறானோ !




காட்டு விலங்குகள் போல்
காலம், காலமாய்
வாழும் மாந்தர்கள்
உண்ணும் உணவுக்கும்
உயிர் வாழ்வதற்கும்
போராடி வாழும் நிலை
பாமர மக்களுக்கு

நகரங்கள் உருவாகி
நாகரீகம் வளர்ந்தபோதும்
போராட்டங்கள் குறையாமல்
புதுப்புது நிகழ்வுகள் ,
அதிகாரத்தில் இருப்போர்க்கு
அள்ளித்தரும் இறைவன்
ஏழைக்கு உதவலையே !

பதவியில் இருப்பவர்கள்
பணத்திற்காக எப்போதும்
சுற்றி,சுற்றி வருவார்கள்
சுறுசுறுப்பா இருப்பார்கள்
ஆதலால் உடலும்,மனமும்
உயர்வோடிருக்கும்
ஒரு குறையும் இராதென எண்ணி

சோர்ந்து இருப்பவனை
சுருண்டு,மாண்டுபோகாமல்
தவிர்ப்பதுபோல் கடவுள்
தூண்டிவிட்டு ,ஏழைகளுக்கு
பாதிப்பு ஏற்படாமல்
பிரச்சனைகளை உருவாக்கி
போராட வைக்கிறானோ !

நல்லாயிருக்குமா?




எல்லாமும் அழகு தான்
அதிகம் ஆகாதவரை ,
பெய்யும் மழை கூட அழகு
வெள்ளம் வராத வரை ,
தென்றலும் அழகு
வேகம் கூடாதவரை

வறுமைக் கோட்டுக்குக் கீழே
வாழ்பவர்கள் அதிகமாம்
இந்தியாவில் ,
படிப்பறிவில் அதிகம்
பின்  தங்கியிருப்பதும்
இங்கு தானாம்

ஊட்டச் சத்து குறைவால
உயிரிழக்கும் குழந்தைகள்
அதிகம் இந்தியாவில் ,
அழிவு தரும் செயல்கள்
இப்படியே அதிகரித்தால்
இந்தியா அழகென்று சொல்ல
இதயம் ஏற்குமா ?

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாகும் ,
அளவுக்கு மீறிய
வறுமையும் / செல்வமும்மனித
ஒழுக்கத்தைக் கெடுக்காதா ?
நாடு நல்லாயிருக்குமா ?