சனி, 28 மார்ச், 2020

இறந்திருப்பேனா !





பிறந்தபோது
உன்னை அறிந்தவனில்லை,
வாழும்போது
உன்னை அறியாமலில்லை,
முடியும்போது
உன்னை நினைக்காமல்
இருந்ததில்லை,
முடிவில் என்னை
மறந்தது நீயன்றோ !
இல்லையென்றால் நான்
இறந்திருப்பேனா !

நிகழ்ச்சிகள் ஏராளம்





சித்திகளோடு
ஒட்டிக்கொண்ட
மெட்டி ஒலிகள்,
காலம் போல
கரைந்துபோன
கோலங்கள் என
வரிசையாக
சின்னத்திரையின்
சீரியல்கள்,
மீண்டும் ஒரு
மெகா சீரியல்
ஆரம்பம் அந்தமானில்
சுனாமி
நித்தம், நித்தம்
ஆட்ட பாட்டங்கள்,
வாழ்க்கை போராட்டங்கள்
கதையின் கரு,
இந்த சீரியலும் கண்ணீரை
சிந்தவைக்கும்
சிந்தையை கலங்கவைக்கும்
நிகழ்ச்சிகள் ஏராளம்

தடுக்காதே அழவிடு





அனைத்துக்கும் ஆதாரமானவனே
ஆதவனே மூத்தவனே
முதலில் எழுந்து, முகம் காட்டி
மக்களுக்கு வழிகாட்டும்
மரியாதைக்குரிய மகராசனே !

கோபம் கொண்டவனைப்போல்
 கோடையில் கடுமையாய் சூடேற்றாதே
கைகூப்பி வணங்குகிறோம்
குடிக்க நீரில்லை, இருக்க வீடில்லை
எங்கே போவோம், சொல்லு

எங்களின் துயர் கண்டு
மேகக் கூட்டங்கள் கூட வானில்
 துவண்டு நிற்கின்றன
தடுக்காதே, அழவிடு
கருணை காட்டு, கலைத்து விடாதே !


புதன், 25 மார்ச், 2020

நிம்மதி கொள்ளும்





தன்னையே அடக்கி ஆள்வது
தரத்தில் உயர்ந்த பண்பு—அதனை
வைராக்கியம் என்பார்கள்
வயது ஆக ஆக
வைராக்கியம் கூடும்,
கூடினால் தான்
முதுமை மரியாதை பெறும்
நிம்மதி கொள்ளும்

அருவியாக்கும்




குளிர் காலத்தில்
கீழ் இறங்கி
மலை மீது அமர்ந்து
மலையை ஒளிர வைத்து
மரியாதை பெறும்
மகுடம் சூடும்

செய் நன்றி மறவாத
செடி, கொடிகளும்
அதனோட நட்புக்கு
தங்களது பசுமையைத்
தியாகம் செய்து
பெருமை சேர்க்கும்

உச்சி வெளுத்தாலும்
கூன் விழாத மலை
இளமைப் பொலிவோடு
நிமிர்ந்து நிற்கும்பனியை
குளிரில் அரவணைத்து
கோடையில் அருவியாக்கும்



திங்கள், 23 மார்ச், 2020

ஈரம் காணும்



மனம் கரைந்து
உருகும் போது
இமை ஓரம்
கசிந்து

ஈரம் காணும்

கரு உருவானது




சிந்தித்தேன்
கவிதைக்குக்
கரு உருவானது,
அடியே உன்னை
சந்தித்தேன்
கலைந்து போனது

சனி, 21 மார்ச், 2020

இனி ஏது குறை !




சென்னையிலிருந்து
மன்னைக்கு ஒரு பயணம்,
சாலையோர நிகழ்வுகள்
சரித்திரம் படைப்பதுபோல்
சாயம் கலையாத
சோகக் காட்சிகள்

பாசத்தை பறிகொடுத்த
பாட்டி, முதியோர் இல்லத்தில்
புலம்பும் ஒரு பரிதாபம்
நீ இருக்க ஒரு கருவறை
இருந்தது என் வயிற்றில்
நானிருக்க உன் வீட்டில்
ஒரு இருட்டறை கூடவா இல்லை

தெருவில் நிற்கும் ஆடு
தன் குட்டிக்கு பால் கொடுப்பதை
தவழ்ந்து வந்த குழந்தையொன்று
தெருவில் குப்புற படுத்து
திகைத்து இரசித்தது
தாயில்லையா?—வீட்டில்
தாயில்லையா?

அழாதே அம்மா 1
இப்ப எனக்கு பசிக்கல,
பிள்ளையின் வேதனை
பெற்றவள் அறியாததா !
கடைசி வரை உயிரோடு போராடும்
கழைக்கூத்தாடியின் பிள்ளை
அறியும் பசியின் வலி

மூன்று வயது நிறையாத
குழந்தை , பெற்றவளுக்கு
பாரமாகிப்போகும் இக்காலத்தில்
பிறந்து மூன்று வயதிலேயே
பெத்தவளுக்கு உணவளிக்கும்
பிள்ளை, தென்னம்பிள்ளையாம்
தாய்க்கும்,சேய்க்கும் இனி என்ன குறை?


முயலுகிறானோ !




எங்கும் நிறைந்திருக்கும்
எம்பெருமானே !
ஏதும் அறியாதவனைப்போல்
ஆலயத்தில் அமர்ந்து கொண்டு
அமைதி காப்பது
முறையோ !

மக்கட்தொகை மண்ணில்
முதல் நூற்றாண்டில்
கால் மில்லியன்,
கி.பி.2000ல் மக்கட்தொகை
எட்டு மில்லியனாம்
உலகம் நிலைத்திருக்குமா !

பூமியின் கொள்ளளவை
புரிந்து கொண்டவர் யார்?
பறவைகளைப்போல்
பட்டறிவு உண்டா?
எடையைக் குறைக்க என்ன
செய்தோம் நாம் ?

சொத்துக்களையும்
சுகங்களையும் மட்டுமே
தேடி அலையும் மாந்தர் இனிநீருக்கு
தெருவில் நின்று போராட
நேரமிருக்குமோ
என்னவோ?

மாயவன் அறியாதவனல்ல
மண்ணின் எடை குறைத்து
மக்களைக் காத்திட
வெள்ளம், வறட்சி போதாதென
கொரனாவை அனுப்பிஎடையை
கொஞ்சம் குறைக்க முயலுகிறானோ !




சனி, 7 மார்ச், 2020

பசுமையாய்.







உழைக்கும் ஏழையின்
இரத்தம்
வியர்வையாகி
பட்ட துயர் தாளாது
விட்ட கண்ணீரும் சேர்ந்து
ஆறாகி ஓடியதில்
பசியும், பட்டினியும்
எப்போதும்
பசுமையாய்

பள்ளியில் தீவிரவாதம்





பாடம் படிக்கும்
பள்ளிக் கூடத்தில்
பெரும் துப்பாக்கி சத்தம்
இடம் மாறி ஒலித்ததில்
இதயங்கள் துடித்தன,
பிள்ளைகளின் உயிர்கள்
பாவிகளின் கைகளில்,
பிள்ளைகளின் பரிதவிப்பால்
 பெற்றவர்கள் பதறினர்

ஓலமிட்ட துப்பாக்கி
உயிர்களை பறித்துவிட
உலகமே கண்ணீர் விட்டது
செத்துபோன செல்வங்களை
செந்நீர் விட்டு
மண்ணில் விதைத்து
மன்றாடி வேண்டினார்கள்
இறைவா
நீயாவது கண் திறந்து பார்.

காசில்லாத நிலைமையோ !





வாகனங்களுக்கு
வழிவிடாமப் போனாலும்
தெருக்களுக்கு
பெருமை சேர்க்கும்,
சின்னக் குழந்தைகள்
சேர்ந்து விளையாட இடமளிக்கும்
சந்துகளுக்கு பின்னாலும்
சரித்திரம் உண்டு

வெய்யிலின் சூடு படாமல்
வெளிச்சம் காணும் சந்துகள்
ஊர் கதை பேசி மகிழ
ஓய்வு நேரத்தில் மாதரை
வாசலில் அமர வைக்கும்,
ஓடாத சாக்கடை நீரால்
உயிர் பிச்சை தந்து
கொசுக்களை வாழ வைக்கும்

காசி சந்துகளில் கூட
கண்டபடி சுற்றி திரியும்
மாடுகள் அத்தனையும்
மரியாதை தெரிந்தவைகள்,
முறைப்படி கற்காதபோதும்
முட்டாது, உரசாதுஇது
காசியோட மகிமையோ,
காசில்லாத நிலைமையோ !