வியாழன், 27 நவம்பர், 2014

சுமந்தபடி.


வில்லிலிருந்து புறப்பட்ட

அம்புபோல்

வாய் விட்டுப்போன

ஒரு சொல்

அற்பமானதென்றாலும்

அர்த்தமற்ற கோபத்தால்

பக்கத்து ஊரில்

பத்தாண்டு வாழ்ந்திருந்தும்

வந்து பார்க்காமல்

வீராப்புடன்

வாழ்ந்தபோதும்,

அறுந்துபோன

சரம்போல

எடுக்கவோ, கோர்க்கவோ

யாரும்

முயலாதபோதும்,

மனம் சிக்கித்

தவிக்கவில்லை,

உன்னோட மரணம்

கேட்ட அந்த நொடி

எல்லாம் இழந்ததுபோல்

என் மனம்

ஏங்கித் தவிக்குது

பழைய நட்பின்

நினைவுகளை

சுமந்தபடி.

திங்கள், 24 நவம்பர், 2014

மாறடிக்க மறந்தோமோ!


சாதிக்கொடுமையாலும்

சருமம் கருத்ததாலும்

சகலமும் மறுக்கலாமோ!

பாவப்பட்ட மாந்தரை

பொல்லாத வார்த்தையாலே

போக வழி காட்டலாமோ!

 

 

காதல் கல்யாணம்

சாதிப்பேயை விரட்டும்,

சில பொழுதுகளில்

காதல் என்ற அஸ்திரம்

கல்யாணத்தைத் தகர்த்து

பெண்மையை சீரழிக்கும்

 

சாதி வெறி

ஒட்டுமொத்த சமூகத்தின்

ஒற்றுமையைக் குலைத்துவிடும்

சாதிகளும் சாதுக்களும்

சாராத சமுதாயம் வேண்டும்

நாடு நலம் பெற

 

பகுத்தறிவை பாழ்படுத்தும்

மூடப்பழக்கங்கள் அத்தனையும்

வறியவை தான்

முடிவுகட்ட நினைத்திருந்தும்

மறக்கடிக்கும் நிகழ்வுகளால்

மாறடிக்க மறந்தோமோ!

 

 

மழை


காத்திருக்கும் வேளையிலே

கண்கலங்க வைப்பவளே

வாடையிலே நீ வந்து

அடைமழையாய் பெய்யலாமோ!

 

நீர்நிலை நிரப்பையிலே

ஆறுகளில் ஓடாமே

வெள்ளமென கரைபுரண்டு

ஊரையே நிரப்பலாமோ!

 

மண்ணுக்கு புனிதம்

நிறைவான மழையால் தானே

உன்னை நம்பி வாழும்—ஊர்சனத்தை

இரக்கமின்றி துன்புறுத்தலாமோ!

 

பண்டிகை திருநாள்—மழையால்

துளிரும் பச்சை நிறத்தால் தானே

தண்ணீரென்ற பெயருனக்கு

தண்மையாய் இருப்பதாலன்றோ!

வியாழன், 20 நவம்பர், 2014

என்ன கவலையோ?


அடைமழை

அடங்கியிருக்க

சோகமேகம்

சூழ்ந்த முகங்கள்

துயர சம்பவத்தின்

துக்க விசாரிப்புகளில்

வழியும் கண்ணீர்

 

குடிபோதையில்

காரோட்டி

நடைபாதையில்

உறங்கிய

நிறைமாத கர்ப்பிணி

அவளோடு கணவனையும்

குருதியில்

மிதக்கவைத்து

கொன்ற

அந்தக் கொடுமையை

 

மனது நினைக்கையில்

தேகம் நடுங்குது,

உணவும் வீடும்

இல்லாத ஏழைக்கு

உதவாம போனால்

இறைவனுக்கும்

ஏது மரியாதை?

அவனுக்கு

என்ன கவலையோ?

செவ்வாய், 11 நவம்பர், 2014

ஏற்றுக்கொள்ளும்


நடக்காத

நடை வண்டி

கற்று தரும்

நடை பயில

 

கால் கடிக்கும்

செருப்புகூட

கைகொடுக்கும்

மானம் காக்க

 

தடுத்து காக்கும்

கரைகூட

வழி காட்டும்

ஆற்று நீருக்கு

 

அறிந்து கொள்ளும் மனம்

அனைத்தையும்

நல்லதாய்

ஏற்றுக் கொள்ளும்

நான் எப்படி மறக்க?


வழக்கமா வருகின்ற

பேருந்து வாகனம்

அழைத்து வரும்

கல்லூரி மாணவியின்

தரிசனத்தில்

பார்வைகள் விளையாட

மனதில் ஒரு சலனம்

 

அவள் அதரங்களில்

விரிந்தாடும்

புன்னகை வசீகரிக்க

அது எனக்கானதென

பத்திரப்படுத்தி

சமயங்களில்

அவளோடு பேசி மகிழ

 

வலிந்து வரவழைத்த

தைரியம் துணைவர

காதலைச் சொல்ல

எண்ணியபோதெல்லாம்

வார்த்தைகள் எழாமல்

ஊனமாகிவிட

வளரும் காதல் புரியாமலே

 

காதலில் தொலைந்த என்னை

கண்டெடுக்கவேண்டி—அவள்

விருப்பம் கேட்டு

தெரிந்து கொள்ளுமுன்னே

வாகன விபத்தால்

அவள் உயிர் இழந்ததை

மனம் ஏற்க மறுத்தது

 

காதலின் பதிவுகள்

காலம் கடந்தும்—அழியாமல்

மூளையில் அமர்ந்து

சில நேரங்களில்

இறங்க மறுக்கும்

நினைவுகளை

நான் எப்படி மறக்க?

வீண் வம்பு


எளிமையை ஒதுக்கி வைத்து

பகட்டு நாகரீகத்தில்

நடித்து வாழ்வது—இன்று

வாடிக்கையாகிப் போனது

 

பாவம் எளிமை.

 

உதவ எண்ணும்போது

ஆயிரம் ஆடம்பரம்

இதயத்தில் ஏறி அமர்ந்தால்

ஏங்காதோ மனம்

 

ஆடம்பரமே இன்று

அரசியலாகிப் போனதும்

சினிமாவின்

நாகரீக மோகத்தாலும்

 

மக்கள் கெடும்போது

எளிமையைப் பற்றி

வாய்கிழியப் பேசினாலும்

ஒன்றும் ஆகப்போவதில்லை

 

நாமொன்று சொல்ல—மக்கள்

சாலை மறியல் செய்ய

நமக்கு எதுக்குங்க

வீண் வம்பு.

வியாழன், 6 நவம்பர், 2014

ஊரை சுற்றி நிற்பதேனோ?


மாயக்கண்ணன், திருடி

வாய்க்குள் ஒளித்து வைத்த

வெண்ணெயைப்போல்

திரண்டிருக்கும் மேகக்கூட்டம்

காத்திருக்கும்—தீபாவளி

பட்டாசின் தீயை அணைப்பதற்கு.

 

கார்கால மழையால்

காய்ந்திருக்கும் தாவரங்கள்

தலை குளித்துத் தலை நிமிரும்

பசுமைக் காட்சியெல்லாம்

கண்களைக் குளிரவைத்துக்

கவிதையாய் சுரந்தபோது

 

தொடர்மழையால் பெருவெள்ளம்

தாறுமாறாய் ஓடும் ஆறு

தறிகெட்டு உடைப்பெடுத்து

விளையும் பயிரும், வாழும் ஊரும்

விணாக்கப் பெய்த மேகம்

பாழாக்கிப்போனது

 

ஆறாக ஓடிவந்து

ஆறாதத் துயர் தந்து

மக்களெல்லாம் அழுது புலம்ப

வெட்கமில்லாம

வெட்டித்தனமாய் நீ மட்டும்

ஊரைசுற்றி நிற்பதேனோ?

 

திங்கள், 3 நவம்பர், 2014

முதுமை.


வாழும்போது

முழுதும் சுமக்கும்

முடியும்போது

சுமையாகிவிடும்

 

இடமின்றி மூலையிலோ

அல்லது

முதியோர் இல்லாத்திலோ

முடங்கிப் போகும்

 

அன்புக்கு ஏங்கும்

ஆதரவு தேடும்

சொந்த பந்தமோ

ஒதுக்கி வைக்கும்

 

உடல் தளரும்

ஊன்றுகோல் தேடும்

என்றாலும்

முதுமையோ

 

அநுபவம் நிறைந்த

பலவீனம்

சாயம் வெளுத்தாலும்

மரியாதை பெறும்

 

விழித்திரை

நித்திரை

மாத்திரையென

திரைகள் விழுந்தால்

 

முதுமை

முத்திரை பதிக்கும்

முடிவான

யாத்திரைக்கு.