திங்கள், 3 நவம்பர், 2014

தூக்கிக்கொள்கிறது பாட்டியின் நினைவு.


பவுனு நகை ஏதுமில்லாம

பகைவரையும் புன்னகையோடு

பண்பாடு குறையாம

அன்போடு உபசரிக்கும்

பாட்டியின் பெரிய மனசுபோல

யாரையும் பார்த்ததில்லை

 

ஊரு கதையை இட்டுகட்டி

பிஞ்சு நெஞ்சங்களில்

நஞ்சு கலந்திடாமல்

ஒன்னொன்னா சொல்லி

உறங்க வைக்கும் அழகு

பாட்டிக்குக் கைவந்த கலை

 

ஒரு வேளை குடிக்கும்

அரை டம்ளர் காப்பியிலும்

பாதியை பேரனுக்குக் கொடுத்து

பார்த்து மகிழும்

பாட்டியின் பாசப்பிணைப்பு

விசாலமானது

 

வெற்றிலை, விளக்கெண்ணெய்

தேனுடன் ஒரு கைவிளக்கு

இதுபோதும் என் பாட்டிக்குக்

குழந்தைகள் நலம்பெற,

கை வைத்தியத்தில் கைராசிக்காரர்

ஊரில் பாட்டிக்கு நல்ல பேருமுண்டு

 

நேற்றைய பேரனாய்

பாட்டியோடு வாழ்ந்ததை

நினைக்கையில் நெஞ்சு கணக்கிறது

பாட்டி செத்துபோனாலும்

உயிர்த்தெழுந்து வந்து

தூக்கிக்கொள்கிறது பாட்டியின் நினைவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக