செவ்வாய், 24 மார்ச், 2015

சிங்கையின் தந்தை

கை சுத்தம் உனக்குண்டு
சிங்கை சுத்தமாயிருக்க அதுவும் காரணம்
வரம் கேட்டு சொர்க்கம் செல்ல
இயலாத ஏழைக்கு—சிங்கை
வந்து மோட்சம் பெற நீதானே காரணம்.

உன் வியர்வை வெளிநடப்பு
செய்ததால் தானே
உளிபட்ட கல் போல
சதுப்பு நிலக்காடு அழகு சிலையானது
உன் கனவும் நனவானது.

அர்த்தமுள்ள வாழ்வென்றால்
அடுத்தவருக்கு உதவிட
அனைவரையும் பக்குவபடுத்தி
அதுபோல தானும் வாழ்ந்த
அற்புத மாமேதை.

அகிலமெங்கும்
அரசியலில் நுழைந்தவர்கள்
அரசனென முடிசூடிக்கொண்டார்கள்
அரசியலல்லவா, நீ வந்ததால்
உன்னையே மகுடமாக்கி சூட்டிக்கொண்டது

நீ விட்ட இரு சொட்டு
கண்ணீர்த்துளிகள்
ஒட்டுமொத்த நாட்டுமக்களை
பெருமைகொள்ள
நிமிர்ந்து நிற்கவைத்தது

உன்னையே நம்பி வாழ்ந்த
மக்களின் கண்ணீர்—உன்னைக்
காக்கக் கூட முடியலையே!
நீ இறைவனுக்கும் மேலானவன்

நாங்கள் தான் பாவிகள்.

வியாழன், 5 மார்ச், 2015

நெஞ்சம் கலங்குதம்மா.

மானுடத்தின் தொட்டிலே
மொழிகளின் தாய்வீடே
தத்துவம் தழைத்தத் திருநாடே
பண்பும், அன்பும் நிறைந்து
பார்போற்ற வாழ்ந்தவளே
உன்னைப்போல் ஒரு அன்னையுண்டோ!

செய்தியறிந்தபோதே
செயலிழந்து போனேனம்மா
பெற்றவள் இறந்ததுபோல்
பாவியாய் நின்றேனம்மா
பாரதத்தாயே-உந்தன்
பெருமையை நீ இழக்கலாமோ?

உயிர்களைக் கொல்வது
பாவமென உபதேசித்த
பல்லாயிரம் சமணத்துறவிகளைக்
கழுவிலேற்றிக் கொன்றது
தாயே, உன் மடியில் தானே!-உனக்கு
பாவமென்று தோன்றலையோ?

உயிர்கள் சிந்திய உதிரத்தால்
உன்னோட களங்கத்தைக்
கழுவி மறைத்தாயோ!
வலியின் வேதனையால்
துடித்து பிரிந்த உயிர்களை-நாளும்
நினைத்து நெஞ்சம் கலங்குதம்மா!