வியாழன், 14 ஜூலை, 2016

தெய்வம் கூட உதவலையே!



தூய்மை படுத்தும் பணியில்
துப்புரவாளர்கள்,
முகத்தைத் திருப்பிக்கொண்டும்
மூக்கை பிடித்துக்கொண்டும்
துப்பிவிட்டு கடந்து போகும்
ஊர்சனங்கள்

பணி செய்பவர்களைப் பார்த்து
புன்னகைகூட சிந்தமாட்டார்கள்
குப்பையாகி விடுமென்று,
அந்தப் பணியாளர்கள்
இரண்டு நாட்கள் வராவிட்டால்
ஊரே நாறிபோகும்

இளம் வயதிலேயே
வீட்டை விட்டு ஓடிவந்து
பணிபுரியும் ஒருவருக்கு
பென்ஷன் வாங்கும் வயது,
கூடப்பிறந்ததுபோல் எப்போதும்
கூடவே இருக்கும் குடிப்பழக்கம்

தன் பொண்ணு ஒருநாள்
தண்ணீ போட்டுவந்து என் மகளைத்
தொடாதேன்னு சொன்னதால—அந்தப்
பொழுதிலிருந்து குடியை விட்டார்
பேத்தி தன் உயிரைக் காத்ததென
பாசம் காட்டி, தெய்வமென போற்றினார்

பெரியவர் வேலைக்கு வரும்போது
பளிச்சென குளித்துத் திருநீரு பூசி
பக்தி பரவசமாய் வருபவர்
பல நாட்கள் வராமலிருந்து
பணிக்கு மீண்டும் திரும்பியவர்
பரிதாபமாய் காணப்பட்டார்

என்னவென்று கேட்டபோது
அழுது, புலம்பித் தவித்தார்
பேத்தி பள்ளிவேனில் அடிபட்டு
செத்திடுச்சு என்றார்,
தெய்வமாய் நினைத்தவருக்கு—அந்தத்
தெய்வம் கூட உதவலையே!

சாகும் வரை கைவிடாது.



ஆழ்கடல்போல
அமைதியாய் இருக்கும்,
இயற்கையின் வலிமைபோல
அழிவு வராமல் காக்கும்,
முன்னேற்றத்தின் அச்சாணி
பூலோகமே அதன் காலடியில்

இயற்கை தாவரம்போல்
இதுவும் வளர்ச்சி காணும்,
பெரிய விஷயங்களை எளிமையாக்கும்
செயலில் அதன் அழகு மிளிரும்,
அறிந்தவர் தலை வணங்குவார்
ஆழிபோல் மௌனம் கற்றுதரும்

இளமையில் கூடி வரும்
இடைவிடா முயற்சியால் மேன்மையுறும்,
இதற்கென போடும் முதலீடு
அதிக இலாபம் தந்து உயர்த்தும்
இது இருந்தால் எல்லாமும் தரும்
இல்லையென்றால் என்ன தரும்?

அறியாமையெனும் இருளை
அகற்றி ஒளிதரும் அறிவு தான் அது,
வாழ்க்கைக்கு அறிவு வலிமை தந்து
வளம் சேர்க்கும்
மதியால் உழைப்பவன் ஆளுகிறான்
மெய்யால் உழைப்பவன் ஆளப்படுகிறான்

அறிவை வளர்க்காமல்
அகிலத்தில் உயர்வில்லை,
மனிதனென பெருமைபட
முயலவேண்டும் அறிவு பெற,
செல்வத்தை விட அறிவு மேலானது
சாகும் வரை கைவிடாது



ஞாயிறு, 10 ஜூலை, 2016

தண்டிக்காமல் விடுவனோ?.

ஊருணியின் கடைசி நீரும்
வரண்டு கிடக்கும் கோடைக் காலம்
தலைவிரி கோலமாய்
தெருவோரம் ஒரு ஆலமரம்--அருகில்
தகவு தரும் ஊர்க்கோயில்

அரசாங்க பணிபுரியும்
அந்த ஊர் மேல்சாதி பையனை
அம்புட்டு சனமும் பாராட்டி
பொண்ணு கொடுக்க
போட்டி போட்ட நிலையில்

கீழ்சாதிப் பொண்ணை
காதலிச்ச அந்த பையனின் விஷயம்
எல்லோருக்கும் தெரிந்துவிட
ஏற்க மறுத்த பெற்றோர்
மாமன் பொண்ணை நிச்சயம் பண்ண

ஒருநாள், காதலியோடு
ஊரவிட்டு ஓடிப்போயி
உற்றார், உறவினர் யாருமின்றி
வேற்று ஊர் கோயிலில்
விவாகம் புரிந்து கொண்டனர்

சாமி குத்தம், ஊர் தாங்காது
சாதி,சனம் செத்துபோகும்—அதனால
முறைப்படி கல்யாணம் நடத்த
முடிவெடுத்ததாய் சொல்லி
பொண்ணையும், பையனையும்
சொந்த ஊர் அழைத்து வந்தார்கள்

அடுத்த சாதி இரத்தம்
அண்டக்கூடாது நம்ம வாரிசு உடம்புல
என்று முக்கியஸ்தர்கள்
ஒன்றுகூடி இரவோடு இரவாக
ஒரு முடிவெடுத்தார்கள்

அடுத்தநாள் விடிகாலை
ஆலமரம் தலைவிரித்து நிற்க
இரு உயிர்கள் பரிதாபமாய்
எரிந்து சாம்பலாகிக் கிடப்பதை
ஏற்கமுடியாமல் ஊரே அழுதது

ஊர்வழக்கம் பிடிக்காம சிறுசுகள்
உயிரை விட்டதாய்
ஊரில் சிலர் சொன்னாலும்
குடும்பத்தாரும், முக்கியஸ்தர்களும்
கொன்றதாக பேசிக்கொண்டார்கள்

குற்றங்கள் புரிவோரை
ஏற்றுக்கொள்கிறதோ சமுதாயம்!
தெய்வத்துக்கு தெரியாதா என்ன?
தருமநீதி தடம்புரளச் செய்தோரை
தண்டிக்காமல் விடுவானோ?


மனம் தெளிந்தாரோ என்னமோ?

கணவருக்கு வயது எழுபது
காலார அவரோடு நடக்கும்போது
எந்த ஒரு பெண்ணை பார்த்தாலும்
எங்கு, எதற்கு போகிறோம்
என்பதை எல்லாம் மறந்து

அந்த பெண்ணைத் தொடரும்
அவரின் சபலபுத்தியை
எப்படி திருத்துவது
என்று டாக்டரிடம் முறையிட்டார்
அவரின் வயதான மனைவி

சில ஆடவர்களுக்கு
இப்படி ஒரு சபலம் இருப்பது இயல்பு
இதை யாராலும் மாற்ற இயலாது
இருந்தாலும் கவலைபட வேண்டாம்
என்று கூறிய டாக்டர்

எங்க வீட்டில் ஒரு
வேட்டை நாய் வளர்க்கிறோம்
வீதியில் போகும் காரைக் கண்டால்
விரட்டிக் கொண்டே
பின்னால் ஓடும்

ஆனால் காரைக் கடித்துக்குதறாது
அதுபோலத்தான் உங்கள் கணவரும்
என்று டாக்டர் விளக்கம் தந்தார்,
மூதாட்டி புரிந்து கொண்டு

மனம் தெளிந்தாரோ, என்னமோ?

காலம் தான் கற்றுதர முடியும்



ஏதேதோ காரணத்தால்
என்னென்னவோ நடந்தாலும்
பாழும் இப்பூவுலகில்
பலியானோர் பலகோடி

இயற்கையின் சீற்றமும் 
மனிதர்களின் பேராசையும்
மக்களைக் கொன்றிருக்கக்
காலத்தை குறை கூறலாமோ?

நாடாண்ட தலைவர்களின்
நன்றி கெட்ட செயலால
ஓடாகி உருக்குலைந்த மக்கள்
உலகப் போர்களை துவக்க

அதனோட விளைவால
அணுவாயுத பரவலாக்கத்
தடை சட்டம் உருவானது
காலம் கற்று தந்தது தானே!

உலகையே புரட்டி போட்ட
சுனாமிபோல—காஷ்மீரில்
ஆறெல்லாம் ஒன்றுகூடி
ஊருக்குள் ஏரியாகி

வீடெல்லாம் மிதந்திருக்க
மக்களெல்லாம் பரிதவிக்க
மீனைப்போல் சுறுசுறுப்பாய்
முதன் மந்திரி, இராணுவம் உதவினாலும்

நாட்டு மக்கள் ஒன்றுபட்டு
உதவிக்கரம் நீட்டலையா?
ஒருமைப்பாட்டை
தூக்கி நிறுத்தலையா?

காலம் ஒரு ஆசான்
கெடுப்பதில்லை யாரையும்
நாளை நலமோடு நாம் வாழ

காலம் தான் கற்றுதர முடியும்

ஞாயிறு, 3 ஜூலை, 2016

நானறியேன்!



தீராத பிணிபோல
தீர்க்கமுடன் வீற்றிருக்கும்
திமிர் பிடித்த வறுமையை
துரத்தி விரட்டிவிட,
தன்னம்பிக்கையும், கல்வியும்
தலைமையேற்று உதவ

அயல் நாடு நோக்கி
அடிபெயர்த்தலின் முதல்படி
நண்பர்களோடு படகில்
நீண்ட ஒரு பயணம் கடலில்,
கரை தொடும் வேளையில்
காலன் வடிவில் கடலலை

கூடி வரும் வேளையில்
தாழி உடைந்ததுபோல்
கலத்தோடு அனைவரும்
கடலில் மூழ்க
பாவப்பட்ட மனிதர்கள்
பரிதாபமாய் மாண்டனர்

கருவுற்றிருக்கும்
குடும்பப் பெண்கள்
கர்ப்ப காலத்தில்
மண்ணை உண்பார்களென
மண்ணில் வாழும்
மாந்தர் கூறுவர்

கடல் அன்னையோ
கர்ப்ப காலத்தில்
மனிதர்களை உண்பாளோ?
கர்ப்ப வயிறா?—இல்லை
வெள்ள நீரா?

நானறியேன்.