வியாழன், 14 ஜூலை, 2016

தெய்வம் கூட உதவலையே!



தூய்மை படுத்தும் பணியில்
துப்புரவாளர்கள்,
முகத்தைத் திருப்பிக்கொண்டும்
மூக்கை பிடித்துக்கொண்டும்
துப்பிவிட்டு கடந்து போகும்
ஊர்சனங்கள்

பணி செய்பவர்களைப் பார்த்து
புன்னகைகூட சிந்தமாட்டார்கள்
குப்பையாகி விடுமென்று,
அந்தப் பணியாளர்கள்
இரண்டு நாட்கள் வராவிட்டால்
ஊரே நாறிபோகும்

இளம் வயதிலேயே
வீட்டை விட்டு ஓடிவந்து
பணிபுரியும் ஒருவருக்கு
பென்ஷன் வாங்கும் வயது,
கூடப்பிறந்ததுபோல் எப்போதும்
கூடவே இருக்கும் குடிப்பழக்கம்

தன் பொண்ணு ஒருநாள்
தண்ணீ போட்டுவந்து என் மகளைத்
தொடாதேன்னு சொன்னதால—அந்தப்
பொழுதிலிருந்து குடியை விட்டார்
பேத்தி தன் உயிரைக் காத்ததென
பாசம் காட்டி, தெய்வமென போற்றினார்

பெரியவர் வேலைக்கு வரும்போது
பளிச்சென குளித்துத் திருநீரு பூசி
பக்தி பரவசமாய் வருபவர்
பல நாட்கள் வராமலிருந்து
பணிக்கு மீண்டும் திரும்பியவர்
பரிதாபமாய் காணப்பட்டார்

என்னவென்று கேட்டபோது
அழுது, புலம்பித் தவித்தார்
பேத்தி பள்ளிவேனில் அடிபட்டு
செத்திடுச்சு என்றார்,
தெய்வமாய் நினைத்தவருக்கு—அந்தத்
தெய்வம் கூட உதவலையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக