செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

நியாயமா? இல்லை அநியாயமா?


ஊருக்குள் வாராத நீர்
வெள்ளந்தியாய் ஓடிவந்து
வெள்ளமா பெருக்கெடுத்து
வாரியெடுத்துபோன குடிசையால்
வாழ்விழந்து வசிக்க இடமின்றி
வீதிக்கு வந்த ஒரு தாய்

கட்டிய கணவனுகோ
கைகொடுத்து உதவுவதுபோல்
குடிப்பழக்கம்,
கடவுளுக்கு என்ன கோபமோ?
கரை சேர்க்க எண்ணாம—அவனை
கண்மூட வைத்துவிட்டான்

துடுப்பிழந்த ஓடம்போல்
தத்தளித்துத் தவித்த தாய்,
தன் பச்சிளம் குழந்தைக்கு
துணையாய் வாழ எண்ணி
தனிமையிலே போராடி-- சாலையோரம்
தான் வசிக்க இடமொன்று பெற்றாள்

பரிதவித்து நித்தம் வாழும்
பாசமுள்ள தாய், ஒரு நாள்
பகலவன் சாய்ந்து இருளானபின்
பசியாறி படுத்துறங்குமுன்
பச்சிளம் சிசுவின் காலில்
புடவை நுனியால் கட்டிவைத்தாள்

சண்டாளப் பாவிகள் இரவில்
சமயம் பார்த்து சிசுவை எடுத்து செல்ல,
சேயைக் காணாதத் தாய்
சோகம் தீராம
சொல்லி அழுத காட்சி
சொன்னாலும் நெஞ்சு தாங்காது

உலகாளும் உமையவளே!
உனை நம்பி வாழ்ந்தவளை
உதவிக்கரம் நீட்டி காக்காதது முறையோ?
உறவிழந்து, வீடிழந்து வாடுவது
உனக்கொன்றும் தெரியாதோ!—நீயே சொல்
உன் செயல் நியாயமா? இல்லை அநியாயமா?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக