புதன், 26 அக்டோபர், 2016

ஏமாளியாக்காதோ!


வார்த்தைகள்
வெளிவர முடியாமல்
சிறைபடும்
சூழ்நிலை
மௌனமாகும்—அது
ஒரு பண்பு

மனித உடலும்
மனமும்
சஞ்சலமின்றி
அசைவற்ற நிலை
அமைதி—அது
ஒரு பண்பாடு

பண்பென்பது
தனி மனிதனின்
சொத்து,
பண்பாடென்பது
சமுதாயத்தின்
கோட்பாடு

இன்று மௌனம்
ஒரு பண்பாடாக
மாறி வருகிறது
எவரும், எதுவும்
எப்படிப் போனாலென்ன
எனும் சுயநலம்

நீதிக்கும்
அநீதிக்கும்
வேற்றுமை பாராமல்
எப்போதும்
மௌனம் சாதித்தால்

ஏமாளியாக்காதோ!

வெள்ளி, 21 அக்டோபர், 2016

புது வசந்தம்.

உறைய வைத்த
குளிர் காலம் முடிந்து
வசந்த காலத்தை
வரவேற்கும்
ஹோலி பண்டிகை போல்
புதிய தேர்தல்.

தெருக்களிலும்
திறந்த வெளி
இடங்களிலும்
வண்ணப் பொடிகள் வீசி
ஆடிப்பாடி மகிழும்
மக்களைப்போல்.

நாள்தோறும்
தோரணம் கட்டி
வண்ணக் கொடிகள் பறக்க
ஊர்களில்
மேடையேறும் கட்சிகளின்
பொதுக் கூட்டங்கள்.

அதில் எதிர் அணியினரை
இகழ்ந்து பேசி
கரி பூசும் வேட்பாளர்.
ஆடிபாடி கொண்டாடி
மனம் மகிழும்
கூட்டத்தினர்.

நல்ல அறுவடையும்
வளமான நிலத்தையும்
நினைவு கூறும் விதமாக
கொண்டாடப்படும்
ஹோலி பண்டிகை போல
தேர்தலும்

தேர்தலுக்கு பின்
அறுந்த உறவுகளை
புதுப்பித்து
எல்லோரும் கொண்டாடி
வரவேற்போம்

புது வசந்தத்தை.

வியாழன், 20 அக்டோபர், 2016

இன்றைய வாழ்க்கை முறை

முப்பது ஆண்டுக்கு
முந்திய காலங்களில்
கடைக்குள்
குந்தியிருக்கும் பொருட்கள்
வயதுக்கு வந்த பெண்போல
வெளியே வர வெட்கப்படும்,
கேட்டால் தான்
எடுத்து கொடுப்பார்கள்

காலம் மாறியது
காலத்திற்கேற்ப சிலுக்குபோல
கண்ணாடி மூடிய கட்டிடம்
கவர்ச்சி காட்ட – அதில்
பொருட்கள் விற்பவர்கள்
சொல்லும் கதைகளில்
மயங்கும் சிறார்கள்போல்
மனதை பறிகொடுக்கும் மாந்தர்

அங்காடிக்கடை நுழைந்தால்
அங்கம் குளிரும், சிலிர்க்கும்
இரைக்காம ஏற வாகனம்,
இதயம் நிறையும் ஒளி—பொருட்கள்
அடுக்கி வைத்த நேர்த்தி
அழகாய் கண்சிமிட்டும்,
வேண்டியதை நாமே
தேர்ந்தெடுக்கும் வசதி.

ஏதோ ஒரு மோகத்தில்
தேவையில்லாப் பொருளையும்
வனிதையர்கள் பாதிவிலையில்
வாங்கி சேர்ப்பர்—பணத்தை
வீணடிக்கும் ஆண்களோ
வேண்டிய பொருளுக்கு
விலை அதிகமென்றாலும்
வாங்கத் தயங்காதவர்கள்

பயன்பாட்டுக்கு வாங்கும்
பொருட்கள் பலனளிக்கும்,
பெருமை சேர்க்கும்—அதுவன்றி
அழகுக்குக் குடை வாங்கி
மழையில் நனையாதபடி
கக்கத்தில் வைத்து
நடக்கும் மக்களின் செயல்தான்
இன்றைய வாழ்க்கை முறை.



ஞாயிறு, 9 அக்டோபர், 2016

அவரோட தலைமாட்டில்.

ஒளியூட்டி
வழி காட்டி
உற்ற துணையாய்
காலம் முழுதும்
கூட இருந்த
கை விளக்கை

எடுத்து நடக்கையிலே
மூச்சு பட்டு
அணையுமின்னு
பெரிசு ஒன்னு
மூச்சை கொஞ்சம்
அடக்கி விட

பெரிசோட உசிரு
அணைந்து விட
விட்டு பிரியாத
கைவிளக்கோ
அணையாமல்
அவரோட தலைமாட்டில்.


ஏற்க மறுப்பதேனோ!

வாழ விரும்பியும்
வசிக்க இடமின்றி
வறுமையில் வாடும்—தரித்திர
வாசிகள் நாங்கள்

காக்கும் கடவுளும்
கண் திறந்து பார்க்காம
கைவிட்டு போனதால்
குழந்தை, குட்டி ஏதுமில்லை

உறவுமில்லை எங்களுக்கு
உற்றாருமில்லை
நட்புமில்லை—ஒரு
நாதியுமில்லை

குடி கெடுக்காத நாங்கள்
குடிமக்களாயிருந்தும்
பிற மனிதர்களால்
புறக்கணிக்கப்படும் பாவங்கள்

பார்வதி, பரமசிவனை
பாரிலுள்ள மக்கள்
அர்த்தநாரீஸ்வரராகவும்
அங்கீகரிக்கும்போது

உடலமைப்பில்
உருமாற்றம் உள்ள
எங்களையும்

ஏற்க மறுப்பேதேனோ?

வெள்ளி, 7 அக்டோபர், 2016

வெளி வருவான்.



சிரசில் சுமக்கும்
சிறு வெண் முத்தை
சிதையாமல்
புல்லு தன் சொத்தென
பத்திரமா பாதுகாக்க

முத்தை தனதாக்க
முயற்சித்த ஆதவன்
கள்வனைப் போல்
களவாட எண்ணி
அபகரிக்க

சினமடைந்த புல்லு
சூரியக் கள்வனை
சிறை பிடித்து
முத்துக்குள்
அடைத்து வைத்தும்

எப்போதும் ஏமாறும்
எளியவரைப் போல்                                                                   
புல்லு தன் முத்தை
பறி கொடுத்து
புலம்பித் தவிக்கையிலே

ஒன்று புரியுது
என்றும் வலியவன்
வெற்றி பெறுவான்—அவனை
சிறையில் அடைத்தாலும்

செல்வாக்கில் வெளிவருவான் 

வியாழன், 6 அக்டோபர், 2016

பரமனுக்கு இணையானது.

நடை பயின்று
நடந்து வரும் ஆறு
முடிவில் கடலில்
முகவரி இழந்தாலும்
ஒருமித்து—மனம்
ஒத்துபோகும்

ஆற்றின் சுவையும்
ஆழியின் உவர்ப்பும்
வேறுபட்டும்
வேற்றுமை பாராது
எப்போதும்
சேர்ந்திருக்கும்

சூரிய மோகத்தில்
சூடேறிய கடல்
மேகமாகி
மேலே போனாலும்—அடுத்த
மேகத்தோடு தான் சண்டை
தங்களுக்குள் இல்லை

மழையாய் மறுபடியும்
மண்ணை தொட்டு
ஆறு, கடலென பிரிந்து
மறுவாழ்வு பெறும்,
மறக்காம ஒருநாள்
மீண்டும் சேரும்

பிரிந்தாலும்,
பிரியாதிருந்தாலும்
வாழும் உயிர்களை
வாழவைப்பதால்—அதை
படைத்த இயற்கையும்
பரமனுக்கு இணையானது