வியாழன், 6 அக்டோபர், 2016

பரமனுக்கு இணையானது.

நடை பயின்று
நடந்து வரும் ஆறு
முடிவில் கடலில்
முகவரி இழந்தாலும்
ஒருமித்து—மனம்
ஒத்துபோகும்

ஆற்றின் சுவையும்
ஆழியின் உவர்ப்பும்
வேறுபட்டும்
வேற்றுமை பாராது
எப்போதும்
சேர்ந்திருக்கும்

சூரிய மோகத்தில்
சூடேறிய கடல்
மேகமாகி
மேலே போனாலும்—அடுத்த
மேகத்தோடு தான் சண்டை
தங்களுக்குள் இல்லை

மழையாய் மறுபடியும்
மண்ணை தொட்டு
ஆறு, கடலென பிரிந்து
மறுவாழ்வு பெறும்,
மறக்காம ஒருநாள்
மீண்டும் சேரும்

பிரிந்தாலும்,
பிரியாதிருந்தாலும்
வாழும் உயிர்களை
வாழவைப்பதால்—அதை
படைத்த இயற்கையும்
பரமனுக்கு இணையானது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக