செவ்வாய், 8 செப்டம்பர், 2015

நிலைத்து வாழுமென்பதாலோ!



கரையேறி வந்தழிக்கும்
கடல் சீற்றம்போல்
கடமை தவறா அரசுகளும்
சில பொழுதுகளில்
குற்றமற்றவனையும்
கொன்றுவிடும்

இளம் நெஞ்சங்களில்
நஞ்சை புகட்டுகிறாரென
குற்றம் சுமத்தப்பட்டவருக்கு
விடிந்தால்
மரண தண்டனையென
அறிவித்திருந்தும்

விடிய விடிய சீடர்களோடு
ஆடிப் பாடி பொழுதைக் கழித்த
குருவிடம் சீடன் கேட்டான்
“எப்படி உங்களால் மகிழ்வோடு
இருக்கமுடிகிறதென்று”

குரு சொன்னார்
“வாழ்க்கையை வாழ்ந்து
அறிந்துகொண்டேன்
மரணத்தை தான்—நான்
இன்னும் அறியவில்லை

ஆதலால் அறியாதவொன்றை
இனிதான் கற்கப்போகிறேன்
என்பது பெருமைதானே”
என்றார் தத்துவமேதை சாக்ரட்டீஸ்,
ஞானிகளுக்கு
சாவும் ஒரு கற்றலாகும்

மாபெரும் தத்துவமேதை
மரணப்படும்போதும்
காக்க யாரும் வாராதது
அவர் புகழ் என்றும்
நிலைத்து வாழுமென்பதாலோ!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக