சனி, 2 மார்ச், 2019

மறையாது, தீராது





பசியால் அழும்
பச்சிளம் குழந்தையொன்று
அதன் தாயை நினைத்து
அழுவதுபோல்
வீசிய கஜா புயலால்
வேரோடு வீழ்ந்த வாழ்வாதாரம்,
பறிபோனதால் ஊர்மக்கள்
புலம்பி அழுததும்

தாயில்லாதபோது குழந்தை
தன் விரலை சூப்பும்
உமிழ்நீர் சுரந்து,குழந்தையின்
வயிற்றுக்குள் போவதுபோல்
காக்கவேண்டியவர்கள்
கண்ணில் படாதபோது
கலங்கித்தவித்த ஊருசனம்
கஞ்சித்தொட்டி திறந்து
கால் வயிற்றை நிரப்பியதும்

பசி கூடக்கூட  குழந்தை
பாலுக்கு அழுவதுபோல்
ஒன்றுமேயில்லாம ஏழைகள்
உயிரைக் காக்க போராடுவதும்
மீண்டும் மீண்டும்
மீளவழி தேடுவதும்
மீட்பின் இன்பம் கிட்டும் வரை
மக்களின்  பசியும், போராட்டமும்
மறையாது, தீராது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக