திங்கள், 23 அக்டோபர், 2017

மறுக்க எனக்கு மனமில்லை



பெருமலைகள் இருமருங்கிலும்
பெற்றோரைப்போல
கைபிடித்து வழிகாட்ட
குதுகலத்தில் இன்புற்ற ஆறு
பசுமையை வாரி இறைத்து
பச்சை வண்ணத்தை
பூசி அழகு சேர்த்தது

மலைகளின் வாரிசாய்
மலையடிவார பழங்குடி மக்கள்
சலசலக்கும் ஆற்று நீரும்
சிலுசிலுக்கும் காற்றும்
வண்ண வண்ண பூக்கள் வீசும்
வாசமும், அழகும்—இயற்கையளித்த
வரப்பிரசாதம் அவர்களுக்கு

விலங்குகள், பறவைகள்
உறவாகிப்போன சொந்தங்கள்,
காடும், மலையும் சூழ
கவலையின்றி வாழும் மக்களிடம்
“ வசதிகள் ஏதுமின்றி இங்கு
 வாழ்வதில் உங்களுக்கு—குறை
 ஒன்றுமில்லையா “ என்றதற்கு

“ இறைவனின் படைப்பு
 இயற்கையின் அரவணைப்பு
 இடையில் எங்களின் உயிர்ப்பு
 எங்களுக்கு ஏது குறை? என்றனர்,
 உணவு தர தாவரம்
 உயிர் காக்க தண்ணீர்—இரண்டைத்தவிர
 வேறொன்றும் அறியோம் “

 “ இயற்கைக்கு மாறாக—நீங்களோ
  அனைத்தையும் அழிப்பதும்
  சாதி, மத பேதங்களால்
  சந்நியாசிபோல வாழ்வதும்—அடுத்தவர்க்குக்
  கொடுத்து உதவாமல்
  கெடுத்து வாழ்வதால் உங்களிடம்
  குறைகள் அதிகமுண்டு “ என்றனர்
  மறுக்க எனக்கு மனமில்லை

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக