புதன், 6 செப்டம்பர், 2017

கண்கொள்ளாக் காட்சி



வானில் தோன்றும்
வட்ட முகத்தழகியின்
வருகைக்காக—விண்ணில்
வண்ணக் கம்பளம் விரிக்க
வேலை நடப்பதுபோல்

மனதைக் கவரும்
மஞ்சள், இளஞ்சிவப்பில்
வண்ணம் தோய்த்து
வானையே அழகுபடுத்தும்
அந்திபொழுது

வேலை முடிந்து
வீட்டுக்கு வந்தமர்ந்து
மனத்தின் சுமைகளை
மறந்து இளைப்பாற
செய்தித் தாளுடன் தந்தை

ஆலயத்தெய்வமாய்
அடுப்படியிலிருந்து
அருள் பாலித்து
அனைவரையும் காக்கும்
அன்புத்தாய்

காக்கும் தெய்வத்திற்குக்
கைகொடுக்கும் தோழி,
துவைத்தத் துணியை
மடித்து வைத்து
அடுக்கி வைக்கும் அக்கா

படுசுட்டி
பாட்டியுடன் சேர்ந்து
பல்லாங்குழி ஆடுபவள்
பலரும் விரும்பும்
பிரியமான தங்கை

குழந்தைபோல
கால் நீட்டி அமர்ந்து
பல்லாங்குழி ஆடும் பாட்டி
பொக்கை வாய் மலர்ந்து
புன்னகை புரிவதை

கண்ணுபடும் இந்த
கூட்டுக்குடும்ப
வாழ்க்கை கூட
உட்கார்ந்து இரசிக்கும்

இந்த கண்கொள்ளாக் காட்சியை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக