திங்கள், 29 ஜூன், 2015

என்ன செய்ய?


நீரு வருமின்னு

நிலமெல்லாம் உழுது

விதை விதைத்தோம்

நீரும் வாராம

மழையும் பொழியாம

நிலமும் வயிறும் காய

கடனும் உழைப்பும்

வீணாச்சு.

 

புள்ள குட்டி

வாழவேண்டி

கட்டுமரமேறி

கடலுக்கு போனோம்

மீன் பிடித்துத் திரும்பையிலே

படகும் மீனும் பறிபோக

உதையும் சிறையும்

உறவாச்சு.

 

பண்டிகை வருவதாலே

பட்டாசு தொழிலில்

முதல் போட்டு

பணங்காசு தேடயிலே

சீனத்து வெடி வந்து—எங்க

உழைப்பும் உயிரும் சீரழிய

வாழ்க்கையும் வணிகமும்

பாழாச்சு.

 

மனசாட்சி இல்லாம

கள்ள வழியிலே

பொருள்  சேர்க்கும்

மனிதரெல்லாம்

வரியும் கட்டாம

வறியவர்க்கும் கொடுக்காம

சிறப்பாத்தான்

வாழ்கிறார்கள்.

 

நல்ல மனசோட

காலம் முழுதும்

மாடாட்டம் உழைச்சாலும்

கடவுள் கூட

கருணை காட்டாம

கஞ்சிக்கும் கூழுக்கும்

கையேந்த வைத்தானே

என்ன செய்ய?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக