வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

சுமக்காத மகராசி.



கழுத்திலே கட்ட
கருகுமணி தேடியதுபோல்
கவிதைக்கு ஒரு
கரு ஒன்று வேண்டி
காத்திருக்கையிலே

கருவாகிப் போனாள் என்னை
கருவில் சுமந்த அன்னை,
கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரைவதுபோல்--என்றும்
கலங்கும் என் நெஞ்சம்

தாயின் நினைவு நெஞ்சில்
தட்டும் போதெல்லாம்
இரு சொட்டு கண்ணீர்
இடம் பெயர்ந்து
தரை தொட்டு மறையும்

தியாகத்தின் திருவுருவம்
தெய்வத்துக்கும் மேலானவள்
ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
அரவணைத்த பொழுதுகள்
அகலாமல் நெஞ்சில்

அடங்க மறுத்த போதெல்லாம்
இமைகள் மூடி
இதயத்தை ஈரமாக்கும்,
மறக்க முடியாமல்
மனசு புலம்பி தவிக்கும்

பஞ்சத்திலும் வறுமையை
பகிர்ந்து கொண்டதில்லை,
பானை அரிசிக்கு
பங்கம் வந்தாலும்
வேறு பயிரு வெந்திருக்கும்

விளையாட்டு பிள்ளைகளாய்
வாழ்ந்த எங்களுக்கு
வறுமையைக் காட்டாத
சுயநலத்தை எப்போதும்
சுமக்காத மகராசி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக