வெள்ளி, 20 ஏப்ரல், 2018

அகிலத்தில் யாருண்டு?




புவி வாழ் உயிரினங்களில்
பிறந்ததும் அழுவது
மானுடப் பிறவி மட்டும் தான்,
மனிதம் அழிந்ததற்காக அல்ல
மண்ணில் பிறந்த சிசுவின்
முதல் சுவாசத்திற்காக

சிரிப்பதால் உடலுக்குக்
கிடைக்கும் பலனை விட
அழுவதால் பெறுவது
அதிகமென்று
இறைவன் உயிரின் இயக்கத்தை
அழுகையில் ஆரம்பித்து வைத்தானோ!

பெண்களை படைத்த தெய்வம்—தன்
பணிகளை அவளிடம் தந்து
நித்திரைக் கொண்டதின்
நன்றிக் கடனாக
ஆண்களைவிட பெண்களை
அதிகம் அழவைத்தானோ!

வடிக்கும் கண்ணீர்
வேதனையை போக்கும்,
உடலுக்கு ஒவ்வாதவற்றை
வெளியேற்றும்
உடல் நலம் பெறும்
உள்ளம் அமைதியுறும்

தொடர் சிரிப்பால் உயிரைத்
தொலைத்தவர்கள் உண்டு,
அழாமல் அழுகையை நெஞ்சில்
இருத்தியவர்களும் இறந்ததுண்டு—ஆனால்
அழுததால இறந்தவர்கள்
அகிலத்தில் யாருண்டு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக