வெள்ளி, 15 ஜூன், 2018

இனி என்ன செய்திடுவான்?




ஏதேதோ கனவுகள்
எத்தனையோ ஏக்கங்கள்
அத்தனையும் சுமந்துகொண்டு
அரைகுறை வாழ்வு வாழும்
ஒரு தாய்க்கு வயது ஐம்பது,
பிறந்த பிள்ளைகள் மூன்று
இப்ப இருப்பதோ இரண்டு

கடைகுட்டி மகன் மீது
கொள்ளை பிரியம் தாய்க்கு,
பெண்மைக்கே உரிய
பொறாமையால பிள்ளையை
கடலம்மா எடுத்து போனாள்
கண்ணிலே காட்டாம
காலத்தை கடத்தி விட்டாள்

கொழும்பில் குடியேறி
குடும்பத்தோடு வாழும்
மூத்த மகனோடு சிலகாலம்
இருந்துவிட்டு,
இரண்டாவது மகன்
வீட்டில் வாழ அந்தத்தாய்—கப்பலில்
இந்தியா திரும்பும்போது

வீசிய புயற்காற்றால்
வீரியம் காட்டும் அலைகள்
கப்பலை ஆட்டி படைக்க—பயணிகள்
கடவுளை பிரார்த்தித்து அழ ,
அந்த அன்னையிடம் மாலுமி
“அமைதியாய் இருக்கிறீர்களே
 உங்களுக்கு பயமில்லையா” என்றார்


அன்னை சொன்னாள்
“ எனக்கு என்ன பயம்?
கப்பல் கரை சேர்ந்தால்
காத்திருக்கும் எனது இரண்டாவது
மகனைக் காண்பேன்—திசை
மாறி கொழும்பு சென்றால்
மூத்தமகனைக் காண்பேன்

கப்பல் மூழ்கினாளோ
கடலில் என் கடைசி மகனைக்
காண்பேன்,
எப்போதும் நான்
எதற்கும் தயாராயிருக்கிறேன்
இதற்கு மேல் இறைவன்
இனி என்ன செய்திடுவான்?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக