புதன், 16 மார்ச், 2016

குறைந்தா போய்விடும்?

இரவல் ஒளியில்
நீ சுடர்விட்டாலும்
வானில் வந்து
வானத்து இருளை போக்கும்
உன் நல்ல மனதை
உலகம் என்றும் நினைக்கும்

இருமுகம் உனக்கு
ஒருமுகம் கண்ட மாந்தர்
மறுமுகம் காண விழைவதுபோல்
நீலக்கடல் அலைகள் கூட
உன்முகம் கண்டு—அன்போடு
உயர்ந்தெழுந்து ஓடிவரும்

பூமியைப்போல
பூகம்பத்துயர் உனக்குமுண்டு
அந்த வேதனையை
அடுத்தவர் அறியாவண்ணம்
மறைக்கிறாயோ
மறுமுகத்தைக் காட்டாமல்

பாட்டிகள் போல
பேரக்குழந்தையை தூக்கிக்
கொஞ்ச ஏதுவாய்
வெண்மதியே நீ கூட
எங்கள் எடையைக் குறைத்து
தூக்கிக் கொஞ்ச ஆசையோ!

முகத்தை மறைப்பதும்
மறைக்காமல் போவதும்
முக்காடு அளவு சரியில்லாமல்—நாளும்
முகத்தின் தோற்றம் குறைவதும்
நவநாகரீக ஒப்பனையா? இல்லை
நாளடைவில் வாடிக்கையானதா?

உன் அழகு வதனம் கண்டு
வானத்துத் தேவர்கள்
வாரியிறைத்த வெண்முத்துக்கள்
கொட்டிக் கிடக்கிறதே
கொஞ்சம் அள்ளிக்கொடுத்தால்
குறைந்தா போய்விடும்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக