ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

காலத்தின் கொடுமை.

மாயவனின் அருளுக்கு
மயங்கும் பக்தகோடிகள்போல்
உனக்கும் பெரும் மதிப்புண்டு—இளமையில்
உன் தரிசனம் கிடைக்காதபோதும்
பெரியவனாய் வளர்ந்தபின்னே
போற்றி வழிபட மக்கள் மறப்பதில்லை

நல்லவர்கள் நட்பால்
நலம்பட வாழ்தல்போல்
உன்னருளால் உயர்வு பெற்றதை
ஊருசனம் அறிந்துகொண்டதும்
பக்கத்து வீட்டாரும்
பாசத்தைப் பொழிகின்றார்

விதி செய்த சதியாய்
சாதி, மத சச்சரவால்
சண்டையிட்டு மடியும்
உலக மாந்தர்போல்—உனக்கும்
உயர்ந்தவர், தாழ்ந்தவரென
வேற்றுமை உண்டுபோலும்

செத்து, கருத்த மனிதன்
சவப்பெட்டிக்குள் அடைபடுவதுபோல்
நீயும் வரும்போதே
நிறம் கருப்பென பேரெடுப்பதால்
மற்றவர் அறியாவண்ணம் பெட்டிக்குள்
மறைக்கப்படுகிறாய்

உச்சத்தில் உன் மதிப்பு
உலகமோ உன் காலடியில்—இருந்தும்
கொலைக்கும், கொள்ளைக்கும்
கொடும் தீவிரவாதத்துக்கும் நீ
காரணமாகிப்போனது

காலத்தின் கொடுமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக