வியாழன், 21 ஏப்ரல், 2016

தரம் தாழ்ந்து போனது



இருளை சுமக்கும் வானம்
இடுப்பு வலி கண்டதுபோல்
குரலெழுப்பும் மேகம்—பிறந்து
முகம் காட்டி மறைந்த ஒளியால்
ஊரே புலம்பி அழும் காட்சி

ஓலைக் குடிசையில்
உயிர் வாழும் ஏழைக்குக்
கொட்டி கொடுப்பதுபோல்
கூரை வழி குடியேறிய
வருண பகவான்

கணவன் ஈட்டும் பணம்
கைகொடுக்காத நிலையில்
உணவு, உடையோடு—இப்போ
உறங்க இடமும் இல்லாமல்
அவள் கதறி அழுத காட்சி
கல் நெஞ்சையும் கரைத்திருக்கும்

நல்ல குடும்பப் பெண்ணானதால்
நல்ல தங்காள்போல் முடிவெடுத்து
தன் இரு குழந்தைகளோடு
தானும் ஆற்றில் குதித்து
உயிர் துறந்தாள்

ஏழை, எளியவரைத்தான்
எப்போதும் பிடிக்கும்
இறைவனுக்கு
காணிக்கையாய் அவர்கள்
கொடுக்கும் காவுகளால்

ஆறுகள்கூட அன்னையாய்
அரவணைத்து காத்திட்டாலும்
சோற்றுக்கு தவிப்பவரோடு
சேரும்போதெல்லாம்—பிணத்தை
பிரசவிப்பது முறையோ?

பாவ, புண்ணியம்
பார்க்காதோ ஆறு!
அதற்கு ஏது அறிவு?
தாயான ஆறுகூட—என்னில்
தரம் தாழ்ந்து போனது.

(தஞ்சையில் நடந்த உண்மை சம்பவம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக