வெள்ளி, 29 ஏப்ரல், 2016

இரண்டும் அழிந்துவிடும்.


பெத்தெடுத்த பிள்ளைபோல
பத்திரமா வளர்த்தெடுக்க
பஞ்ச பூதங்களையும்
படைத்து அருளியவளே!
உன் பெருமை போற்றாமல்
உன்னை அழிக்கலாமோ?

சுயநல மாந்தராலே
சீரழிந்து போனவளே!
காடெல்லாம் அழித்ததாலே
கார்மேகம் தோன்றாமல்
குடிநீரும் கிடைக்காமல்--ஊருக்குள்
சுற்றித்திரியுது வனவிலங்கு
சிறைபட்டு வாடுது ஊர்மக்கள்

பேராசை மனிதர்களால்
தோண்டி எடுத்த மணல்
தோராய மதிப்பாலே
குறைவாகிக் குறைகண்டபோதிலும்
கொள்ளி வைத்ததென்னவோ
இயற்கை வளத்துக்குத் தானே!

குளத்தின் கரையோரம்
குடியிருக்கும் மக்களாலே
குளத்தில் குடியேறும்
குப்பை, கழிவுகளால்
வெட்டவெளி மெத்தையாகி
உதவாமல் போகும் நீர்
இயற்கையின் பாதிப்பு தானே!

இயற்கையைக் காத்து
இயற்கையோடு
ஒன்றிணைந்து வாழ்ந்தால்
மண்ணும், மானுடமும்—என்றும்
மரியாதை பெறும்
இல்லையென்றால்
இரண்டும் அழிந்துவிடும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக