புதன், 7 செப்டம்பர், 2016

உபதேசமோ!

கூடி ஒருமித்து வாழும்
கூட்டுக்குடும்ப வாழ்க்கையில்
காரணம் தெரியாமலேயே
கசப்பு நிகழ்வுகள்
தோன்றி மறைந்தாலும்—பாசம்
தாய்மைக்கு தான் உண்டு

மருமகப் பொண்ணுக்கு
மனதில் என்ன பாரமோ?
எடுத்து முடியாத கூந்தல்
நெருப்பு போல கண்கள்
அகத்தில் குடிகொண்ட கோபம்
புறத்தில் வெளிப்பாடு

அவளது ஒன்றரை வயது குழந்தை
அவளைத்தேடி வர
“ எங்கிட்டே வராதே, சனியனே
எங்காவது தொலைந்து போவென”
பிடித்துத் தள்ளியதில்
பாவம் குழந்தை எட்டிபோய் விழுந்தாள்

வீட்டிலுள்ள உறவுகள்
வாயடைத்து நின்றிருக்க,
அடிபட்ட குழந்தையோ—மீண்டும்
அம்மாவென்று அழுதுகொண்டே
அன்னை மடி தேடி சரிந்தாள்
அணைத்துக்கொண்டாள் தாய்

அடித்தாலும் நீ
அணைத்தாலும் நீதானெனும்
உண்மையைக் குழந்தை
எப்படி அறிந்திருக்கிறது?—அது
ஊட்டி வளர்த்த தாய்ப்பாலின்
உபதேசமோ!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக