வெள்ளி, 23 டிசம்பர், 2016

நடுத்தெருவில் நிற்கலையா?

ஒன்று கூடி வாழ எண்ணி
உருவாக்கிய மதங்கள்,
வீசிய காற்று மரத்தை
வேரோடு சாய்த்தது போல்
மனிதர்களை
மனிதர்களிடமிருந்தே
பிரித்தது பாவமல்லவா?
பகைமையை வளர்த்ததால்
பாரில் அரங்கேறும் பாவங்கள்
பதற வைக்கவில்லையா மனத்தை?

நாடு நலம்பெற
நலிவுற்றோர் நிலை உயர
மக்களால் மக்களுக்காக
மக்களே தேர்ந்தெடுத்து
ஆளப்போன அரசியலார்
அல்லல்படும் மக்களின்
அவலங்களை அறிந்ததுண்டா?
சுயநலம் கொண்டு சேர்த்த
செல்வத்தால் ஆண்டவனானார்கள்
மக்களோ ஆண்டியானார்கள்

ஆண்டவருக்கும்
ஆளப்பட்டோருக்கும் இடைவெளி
வானுக்கும், மண்ணுக்கும்
உள்ளது போல்
வேறுபட்டு போகலையா?
ஆண்டவன் எப்போதும்போல்
ஆலயத்தில் அமர்ந்தான்
ஆண்டியோ பாவம்
நாளும் ஒரு போராட்டமென
நடுத்தெருவில் நிற்கலையா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக