புதன், 31 மே, 2017

உயிரை மாய்த்துக்கொண்டார்


விதைக்க முடியாம
விளை நிலம் வாய் பிளக்க,
உயிரைக் காக்க
ஊருசனம் ஒன்றுகூடி
மழையைக் கொண்டுவர
மாரி தாத்தாவைத் தேடிபோனார்கள்

குறி சொல்லும் தாத்தாவின்
குரலுக்கு மழை வருமென
ஊருசனம் நம்பியது,
சுத்தபத்தமுள்ள தாத்தா
சாமி மீதும், தொழில் மீதும்
சலியாத பக்தி கொண்டவர்

குறி சொல்ல ஒருநாள்
கிளம்பும்போது
விதவை பேத்தி எதிரே வர
விநாச காலமென
குறி சொல்வதை தள்ளி வைத்துக்
குடிக்க நீர் கேட்டார் பேத்தியிடம்

தாகம் தணிக்க அல்லவென
தாத்தா, பேத்தி இருவரும் அறிவர்,
மறுநாள் குறி சொல்ல
ஊருசனம் கூடியபோது
தாத்தா சொன்னார் “பெரிய
தப்பு ஒன்னு ஊரில் நடந்திருக்கு

ஆத்தா கோவத்துல இருக்கா
அதனால தான் மழையில்ல,
பரிகாரம் செய்வதற்கு
பாவம் செய்தவர்கள்
பொழுது விடியுமுன்னே
ஒருவருக்கும் தெரியாம—ஊரைவிட்டு
ஓடிப்போக வேண்டும்” என்றார்

அடுத்த நாள் காலை
தாத்தாவின் பேத்திய காணோம்,
தப்பென்ன செஞ்சான்னு ஊரே வினவ
பதினாறு வயசில விதவையான
பேத்தி அடுத்தவீட்டு பையனோடு
பழகுவதை தாத்தா பார்த்ததுதான்

ஊருசனம் அறிந்தால்—பேத்தியை
உயிரோடு கொன்றுவிடுவார்களென
தாத்தா செய்த தந்திரம்,
தானும் தவறிழைத்ததாய் எண்ணி
தண்டனை கொடுத்துத்

தன் உயிரை மாய்த்துக்கொண்டார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக