ஞாயிறு, 6 டிசம்பர், 2015

பெருமை உனக்குமுண்டு.



ஒருமுறை சிறை சென்று
பலமுறை குற்றம் சுமக்கும்
திருடனைப்போல்
பருவமழை போலீசால்—வருடாவருடம்
பாதிக்கப்படும் கடலோர ஊர்கள்

மருத்துவ கவணிப்பின்றி
மரணப்பட்ட நோயாளிகள்—காரணம்
புயலென சொன்னதுபோல்
வடியும் வெள்ளத்தில் மீட்ட சடலங்கள்
உயிரிருந்தால் என்ன பொய் சொல்லுமோ!

நல்லவர் ஒருவருக்காக பெய்யுமழை
எல்லோரையும் காக்குமென்பது மரபு—இப்படி
பேய் மழையாய் பெய்து அழித்தால்
நல்லவர்கள் குறைந்து போனது
மழைக்குக் கூட தெரிந்து போனதோ!

இறைவன் சோதிப்பதுபோல் மழை
இருந்ததையெல்லாம் எடுத்தழித்து
உயர்வு தாழ்வின்றி ஒருவேளை சோற்றுக்கு
நாயாய் அலையவிட்டாலும்—மக்களை
மனிதநேயத்தால் காப்பாற்றிய நல்லுள்ளங்களை
மனதார கைகூப்பி வணங்குகிறேன்

அழிவுகள் ஆயிரம் நீ செய்தபோதும்
விசேஷ நாட்களில் சுத்தப்படுத்தும் வீடுபோல
அசுத்தங்கள் அத்தனையும் அகற்றி
சுத்தம் செய்து, சென்னையை சிங்கார நகராய்

மாற்றும் பெருமை உனக்குமுண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக