வெள்ளி, 15 ஜனவரி, 2016

மரணத்தை நேசிப்பதில்லை.



உயிர்தந்து உடல்தந்து
உலவவிட்ட தெய்வம்
வாழும்வரை வாடவிட்டால்—மனம்
வழியின்றி வழிபடுமோ!

ஆதரவற்ற முதியவரை
ஆட்டிபடைக்கும் இறைவன்
அந்திம காலத்திலும்
அவர் நெஞ்சில் நிலைப்பாரா!

தன் பசிபோக்க
தூக்கி சுமக்கும் சுமையை
இறக்கி, இளைப்பாறி—மீண்டும்
தூக்கிவிட ஆளில்லாதபோது

இறைவனிடம் முறையிடாமல்
அழைத்துக் கொள்ளாமல்
இருக்கும் யமனுக்குமா
இரக்கமில்லையென புலம்ப

எதிரில் தோன்றிய யமன்
என்ன வேண்டுமென வினவ
சிரித்து, சமாளித்த முதியவர்—தலையில்
சுமையை தூக்கி வைக்க வேண்டினார்

வலைக்குள் விழும் மீனும்
வாழ்வதற்கு துடிப்பதுபோல்
மண்ணில் வாழ் உயிரினங்கள்

மரணத்தை நேசிப்பதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக