வெள்ளி, 29 ஜனவரி, 2016

தெய்வத்தைப்போல.


முத்தமிட்ட காதலனை
மூடி மறைத்து
மானம் காத்த மேகம்
மழையை பிரசவித்து
மண்ணுக்கு அனுப்பியது

மகாபாரதக் கர்ணன்
மண்ணில் பிறந்து
மழலைப் பருவத்தில்
ஆற்றில் விடப்பட்டதுபோல்

வானில் பிறப்பெடுத்து
வீழ்ந்த மழலை நீர்
வையகம் தொட்டதற்கும்
ஒற்றுமை உண்டுபோலும்

கலங்கத்தை மறைக்கக்
கையாண்ட முறையோ?
இருந்தும் ஈரமுண்டு
இருநெஞ்சங்களிலும்

தவழ்ந்து விளையாட
தடம் ஏதும் இல்லாம மழைநீர்
இடம் தேடி குதிக்கும்
அருவியென பேரெடுக்கும்

விழுமதன் வேகத்தில்
எழுகின்ற ஓசையால்
ஆடி நடுங்கும் செடிகொடிகள்
அச்சத்தில் வேர்த்திருக்கும்

மலைத் தாயின்
மார்பில் தவழும்
முல்லைச் சரம்போல
வெள்ளி ஆரமாகும்

நடனமாடும் தாரகைக்கு
ஒளியூட்டி மெருகேற்றும்
சூரியப் பார்வையால்
உயிரினங்கள் சொக்கி நிற்கும்

ஏற இயலாத உயிர்களுக்கும்
இறங்கி வந்து
தாகம் தணித்துக் காக்கும்
இறைவனைப்போல.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக