வியாழன், 16 ஜூன், 2016

உழைப்பு தானே உயிர்மூச்சு

மலைவாழ் மக்கள் வாழும்
மலையூர் கிராமம் ஒன்றில்--வயது
எழுபதைத் தாண்டி
எடுத்துக்காட்டாய் வாழும் முதியவர்,
ஊரோர மதுரை வீரன்போல
உடல்வாகு

ஒருநாள் கூட
ஓய்வு எடுக்காத உழைப்பாளி
வயலுக்கு இவர் வந்தபின்
வானத்து சூரியனும் எழுவான்
அனைத்து வேலைகளையும்
அலுக்காமல் தானே செய்திடுவார்

உச்சி வெய்யிலுக்கும்
ஓயாது பெய்யும் மழைக்கும்
ஒதுங்காத தன்மானக்காரர்
எதையும் பொருட்படுத்தாமல்
உழைப்பையே பெரிதெனக்கொண்டு
உயிர் வாழும் உத்தமர்

நெற்றி வியர்வை சிந்தி
நிலத்தில் பாடுபட்டும்
நீர்வரத்து இல்லாமல் கெடும்
பெய்து கெடுக்கும் மழை
பெய்யாமலும் கெடுக்கும்
பூச்சி, விலங்கு வந்து அழிக்கும்

விதைத்து, பாதுகாத்து,
வளர்த்து, அறுவடை செய்து
விற்று முடித்து
நாலு காசு பார்ப்பதற்கு—அந்த
நாரயணனே வந்தாலும்
உத்தரவாதம் தருவானா?

விளைச்சல் இல்லாமப்போனால்
வாங்கிய கடன் எகிறும்
விளைச்சல் இருந்தாலோ
சந்தை விலை சரியும்—இப்படி
சொந்த எசமானரையே
சாகடிக்கும் விவசாயம்

எல்லாம் அறிந்திருந்தும்
ஏனிந்தக் கடும் உழைப்பு
இந்த வயதில் உழைக்காமல்
இருக்கலாமே என்றதற்கு—அவர்
“இத்தனை பாடுபட்டும்
இறக்க வழிகாட்டும்போது

உழைக்காமல் இருந்தால்
வயித்துக்கு வழி ஏது?—அன்றே
மண்ணோடு மண்ணாக
மண்ணுக்கு துணைபோவேன்” என்றார்
மண்ணை தெய்வமா மதிப்பவருக்கு

உழைப்பு தானே உயிர்மூச்சு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக