வியாழன், 16 ஜூன், 2016

மாசற்றது, மரியாதைக்குரியது.

ஒற்றையில் வாழும் ஆசிரியருக்கு
ஒருவருமில்லை
வயதோ ஐம்பது
வாழ்க்கையோ பரிதாபம்

தனிமையின் தவிப்புக்கு
தீரவழி கண்டதுபோல்
சுற்றித்திரிந்த நாயொன்றை
சேர்த்துக்கொண்டார் வீட்டில்

நம்பிக்கை வீண்போகவில்லை
நட்பையும், நன்றியையும் காட்டிய
நாய் வீட்டையும் காத்தது
நன்றி சொன்னார் இறைவனுக்கு

நாய் இரயில் நிலையம் வந்து
நாளும் ஆசிரியரை பணிக்கு
வழியனுப்பும் காலையில்—அந்தியில்
வரவேற்று அழைத்து செல்லும்

வாடிக்கையானது நாய்க்கு
ஒரு நாள் வரவேற்க வந்தபோது
வந்துசேராத ஆசிரியரால்
வேதனையில் வாடியது

அன்றுமுதல் நாய்க்கு
இரயில் நிலையம் வந்துபோவது
விடாது தொடர்கதையானது--அதில்
வருடம் ஒன்று கடந்துபோனது

இன்று இறந்துகிடக்கிறது
அதே நாய் இரயில் நிலையத்தில்,
ஆசிரியர் பணியிடத்தில்
இறந்துபோனதை அறியாமலே

விலங்குகளின் நேசமும்,நேயமும்
விலகாது என்றும் நெஞ்சைவிட்டு,
மனிதநேயத்தை விட
மாசற்றது, மரியாதைக்குரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக