ஞாயிறு, 26 ஜூன், 2016

பணங்காசு பெரிசல்ல!



. பொறந்த ஊரு திரும்பிவந்து
பொழைக்க ஒருவழிதேடி
தையக்கடை ஒன்னு வச்சு
தொழில் நடத்தும் பரமசிவம்
பாதி ஆயுளைக் கடந்தவரு
பாம்பேயில் தொழில் கற்றவரு

அடிமைபோல் உழைத்து
அரசன்போல் வாழ எண்ணி
அவர் ஒவ்வொரு ஆண்டும்
வரும் தீபாவளித் திருநாளில்
வந்து குவியும் துணிகளை
வாங்கிக் கொள்வார்

தைக்கக் கொடுத்தவர்கள்
துணிகேட்டு வரும்போது
தந்துபோனது நினைவுக்கு வரும்,
நாளை வர நயம்பட சொல்லி
நேர்மையை நிலைநாட்டும்
நாணயஸ்தர் பரமசிவம்

தீபாவளிக்கு இருதினம் முன்
விளக்கு, ஒலிபெருக்கி வந்தமரும்
விடியவிடிய கடை களைகட்டும்
உறங்காத வேலைக்கு
உத்திரவாதம் தருவதுபோல்
ஊர்மக்களுக்கு நம்பிக்கையூட்டும்

தீபாவளிதின விடியலில்
துணிகளை தந்து முடிந்தபின்
வீடுசென்று குளித்து
ஒரு பழைய சட்டையொன்றை
போட்டுக்கொள்வார்
பின்பு காலைசாப்பாடு

ஊருக்கு துணி தைத்து
புத்தாடை தரும் நீங்கள்
உங்களுக்கு ஒன்னு தச்சுக்கிலையா?
என மனைவி வினவ—அவர்
எனக்கு எல்லா நாளும் தீபாவளி
என்று சொல்லி படுக்கபோனார்

அந்திசாயும் பொழுதில் எழுந்த
அவர் நண்பர்களோடு
அடுத்த ஊரில் சினிமா பார்க்க
ஆசையோடு புறப்பட்டார்,
மனசு நிறைஞ்சிருந்தா
பணங்காசு பெரிசல்ல,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக