வியாழன், 9 ஜூன், 2016

மறுபிறவி எடுக்கும்


செயற்கை படைப்புகள் காலத்தால்
சிதைந்து போகும்,
இயற்கை படைப்புமா
இல்லாமல் போகும்—இல்லை
இடமாறிப் போகுமா?

பார்த்து இரசித்த—சிறு
பறவைக் கூட்டங்கள்
போன இடம் தெரியவில்லை,
மனத்தை மயக்கிய காட்சிகள்
மாயமாகிப் போனதே!

விண்வெளியில் பல கோள்கள்
வீதிவலம் வந்தாலும்--அதில்
வாழும் உயிர்கள் இல்லை,
புவியில் மட்டும் தான்
பிறப்பெடுத்து உயிர் வாழும்

புவி வாழ் உயிர்களுக்கு
பூமி பொதுவானது என்றாலும்
விலங்கும், பறவையும்
உயிர் வாழும், மனிதன் இல்லாமல்—ஆனால்
இவைகளின்றி மனிதன் உயிர்வாழ
இயலாது என்பதுதான் உண்மை

மனித சுயநலத்திற்கு
மண்ணின் உயிர்களையும்
மண்ணையும் சிதைத்து அழிக்க
மனிதனுக்கு யார் தந்தது உரிமை?
இதற்கொரு முடிவில்லையா?

இயற்கையும் ஒருநாள்
நிச்சயம் சீறிப்பாயும்
பொறுமையிழந்து பொங்கியெழும்
பூமி தாங்காது சிதையும்
மானுடம் மறுபிறவி எடுக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக