ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

கருணை தான் பேரழகு

உயர்ந்த மலைகள் சூழ்ந்திருக்க
சரிந்த நிலம்போல் காணும்
மலை அடிவாரம் அழகு,
பார்க்குமிடமெங்கும் பச்சைபசேலென
பட்டு விரிக்கும் பசுமை அழகு,
மாலை நேரத்து மழை ஓய்ந்து
முகம் காட்டும் கதிரவனின் பார்வை அழகு,
வெள்ளிச் சரிகைபோல் ஒளி வீசி
விழும் நீரின் வீழ்ச்சி அழகு,
முகிலின் கூட்டம் மலைகளை
முத்தமிடும் காட்சி அழகு,

வண்ண மலர்கள் இதழ் விரித்து
வாசம் பரப்பும் செயல் அழகு,
இருக்கும் இடத்தை விட்டு ஒவ்வொன்றாய்
வெளிவரும் விலங்குகளின் வருகை அழகு,
பறவைகள் சிறகை விரித்துத்
தன் அலகால் கோதி விடுதல் அழகு,
கூட்டமாய் வரும் காட்டெருமை
எழுப்பும் ஒலி அழகு,
புல்லைத் தேடி வரும் புள்ளிமான்களின்
துள்ளல் அழகு,
கம்பீரமாய் வரும் காட்டு ராஜா
சிங்கத்தின் நடை அழகு

பார்த்த விலங்குகள் பதுங்க
இடம் தேடி ஓடும் ஓட்டம் அழகு,
பிறந்து சில நாட்களே ஆன மான் குட்டி
தத்தி நடப்பதும், விழுந்து எழுவதும்
பார்த்து மிரள்வதும்,ஒத்தையாய் சிக்கியதும்
அதன் அறியா இளமை அழகு,
மான் குட்டியை கொல்லாமல் சிங்கம்
அது எழும் வரை காத்து நின்று
விழும்போது தானும் படுத்து
நடை பயில நடந்து காட்டி
வழிகாட்டிய காட்டு ராஜாவின்
கருணை தான் பேரழகு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக