செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

மதிய உணவருந்தி

கார்கால மழையில்
காட்டாறு பெருக்கெடுத்து
ஊரை அறுத்து ஓடி
உயிரை எடுத்ததுபோல்

மானுட ஜென்மமென
நல்லாத்தான் பிறப்பெடுத்தாய்
ஏழையாய் பிறந்ததாலே
இளமையிலே போனாயோ!

பாடம் படிப்பதற்கு
பள்ளிக்கு சென்றாயோ—இல்லை
மதிய உணவருந்தி
மண்ணுக்கு உணவானாயோ!

பள்ளிக்கு போனாயோ—இல்லை
பள்ளிகொள்ள போனாயோ
ஊருக்கு புரிய வைக்க
உன்னையே பாடமாக்கி சென்றாயோ!

வசதி இருந்திருந்தால்
வீனாக செத்திடுமோ
பெத்தவளை தவிக்கவிட்டு
சொல்லாமத்தான் போயிடுமோ!

பொல்லாத பூமியிலே
நல்லவங்க இல்லேன்னு
சொல்லாமப் புரியவச்சு—நீ
பொசுக்குன்னுதான் போனாயோ!

சொல்லிவச்சு போவதுபோல்
மொத்தமா போறீங்க
மீண்டும் பிறப்பெடுத்தா
நல்லவங்க வாழும்
பணக்கார நாடா பார்த்து போங்க!


(மதிய உணவருந்தி இறந்த பள்ளிக்குழந்தைகளின் நினைவாக).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக