வியாழன், 11 நவம்பர், 2010

kavithai 9

எங்க ஊரு.

சிவாலய ஊர்கள் சுற்றி இருக்க‌
வைணவப் பெருமாள் இராஜ கோபாலன்
வீற்றிருக்கும் இராஜ மன்னார்குடி.
என்றும் பதினாறாய் இன்றும் காட்சி தரும்
புண்ணிய பூமி.
வளர்ச்சி இருந்தாலல்லவா முதிர்ச்சி காண.
வற்றாத காவிரி வழிமாறி போனதால்
வளத்தைத் தொலைத்து
சிவனே என்றிருக்கும் பெருமாளின் ஊர்.

வட்டம் என்று வயதுக்கு வந்தே
ஆண்டு நூறைத் தாண்டினாலும்
மாவ‌ட்ட‌ம் காணாத‌ முதிர்க‌ன்னி.
இளைய‌வ‌ள் ஆருரிட‌ம் இதய‌த்தை ப‌றிகொடுத்து
மாவ‌ட்ட‌மாக்கி மண‌முடித்து ம‌கிழ்வுற்றார்,
க‌ருணையுள்ள நிதிய‌ர‌ச‌ர்..இருந்தும்
ம‌ண‌ம் காணாம‌ல் ம‌ன‌ம் கோணாம‌ல்
சிவ‌னே என்றிருக்கும் பெருமாளின் ஊர்.

ஊரைச்சுற்றி இறைவ‌னின் ஆல‌ய‌ங்க‌ள்
ஊரையே வ‌ல‌ம் வ‌ரும் பாமினி ஆறு
ஊருக்குள்ளேயே உழ‌வ‌ர் சந்தை
ச‌ந்தைக்கு ப‌க்க‌த்தில் பேருந்து நிலைய‌ம்
ஊரெங்கும் ஊருணிக‌ள் ப‌ல‌ இருந்தும்
க‌ழிவுக‌ளைக் கொட்டி க‌ய‌ல் வ‌ள‌ர்க்க‌க்
க‌றையான‌து க‌ரையெல்லாம்.
அக்க‌றையின்றி குடிநீருக்கு
நில‌த்த‌டி நீரை நம்பி வாழும்
சிவ‌னே என்றிருக்கும் பெருமாளின் ஊர்.

ப‌ட‌ரும் கொடிக்கு தேர்த‌ந்து பேர்பெற்ற‌
பாரி வ‌ள்ள‌ல் வ‌ழிவ‌ந்த‌ ஊர் ம‌க்க‌ள்
கொடுக்கும் வ‌ல‌துகை அறியா இட‌துகை
இருக்கும் இத‌ய‌ங்க‌ள் வாழும் ம‌ன்னார்குடி.
இழ‌ந்த‌ இர‌யில் சேவையை ம‌ற‌ந்து
இருந்த‌ இர‌யில் பாதையை..வ‌சிக்க‌
ப‌ழ‌னி முருக‌னின் உற‌வின‌ர்க்குக் கொடுத்து
சிவ‌னே என்றிருக்கும் பெருமாளின் ஊர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக