செவ்வாய், 17 நவம்பர், 2015

மறந்ததும் நீயன்றோ!


நான்
பிறந்தபோது
உன்னை அறிந்தவனில்லை,
வாழ்ந்தபோது
வழிபடாமலிருந்ததில்லை,
முடியும்போதும் கூட
மறந்ததில்லை உன்னை

இறைவா
அகிலத்தைக் காப்பவனே
அடியேனைக் காணலையோ,
முடிவில் என்னை
மறந்ததும் நீயன்றோ
இல்லையென்றால்—நான்
இறந்திருப்பேனா?

படுத்தபடி நான் போக
பாவம் என்ன
செய்துவிட்டேன்?
பாடு பட்டு, சிறுக சிறுக
சேர்த்தவைகள்
அத்தனையும்
செத்தபின்னே எங்கே வரும்?

சொந்த பந்தம் ஏராளம்
சொத்து பத்தும் குறைவில்லை
இருந்தும்
கண் மூடி போற எனக்குக்
கூட வர நாலு பேரு,
இனி ஊரோரக் காடு தான்
என்னோட வீடு

மாலை சூரியன்
மறையத் தொடங்கியதும்
சிதையில் நானும்
சூரியனாவேன்,
பூத்துக் குலுங்கும் பூக்களோடு
செடி, கொடிகளும்
என் புது சொந்தங்களாகும்

பகலெல்லாம் சுற்றி
இரை தேடிய பறவைகள்
இரவில் கூடடைந்து
இசைக்கும் தாலாட்டில்
நானும் கண்ணுறக்கம்
நாளும் கொள்வேனே!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக