வியாழன், 19 ஜூன், 2014

நல்லவராய்க் காட்டிக்கொள்ள.


நாட்டுக்கும், கல்விக்கும்

நதிகளுக்கும், விதிகளுக்கும்

பெண்ணோட பேரவச்சு

பெண்வடிவாய் ஏற்றிவச்சு

பெருமையாய் போற்றுகின்றோம்.

 

அவனியிலே நம்மோடு

அவதரித்த பெண்ணினத்தை—ஏனோ

சரிசமமாய் ஏற்காமல்

சமூகப் பண்பாடென அடக்கி

சீரழியச் செய்தது ஒன்றா, இரண்டா?

 

பணவசதி குறைவாலே

பெண் குழந்தை வேண்டாமென

பெண்ணின் தந்தை முடிவெடுக்க

பயிராகி விளையுமுன்னே

கருவிலேயே கலைக்கலையா?

 

கலையாமப் பொறந்த இரு

பாவையரின் வாழ்வுதனை

பாவி ஆண்கள் பறிக்கலையா?

மண்ணோட மானம், மங்கையாய்

மரத்தில் தான் தொங்கலையா?

 

தொங்காம வாழ்ந்த பொண்ணு

தாலியொன்னு கழுத்தில் ஏற

தவமிருந்து காத்திருக்க

ஆணின் வரதட்சனையால்—பந்தலை

அவள் பார்க்காமல் இறக்கலையா?

 

காதலித்து மணந்த பொண்ணு

பாதியிலே புருசன் சாக

சொந்த பந்தம் இல்லாம

சின்னஞ்சிறு பிள்ளைகளோடு

தெருவில் வந்து நிற்கலையா?

 

ஆண்டாண்டு காலமாய்

பெண்ணினத்தை அடிமையாக்கி

கொடுமைகள் பல செய்ததாலே

நல்லவராய்க் காட்டிக்கொள்ள—மற்றதுக்கும்

பெண்ணின் பெயரை சூட்டினாரோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக